டி.எஸ்.பி பெயரில் போலி முகநூல் கணக்குத் தொடங்கி பணம் கேட்ட மோசடி கும்பல்

வேலூரில் போதை பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி பெயரில் போலியாக முகநூல் கணக்குத் தொடங்கி அவரது நட்பு வட்டத்தில் பணம் கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.


அண்மைக்காலமாக காவல்துறை உயரதிகாரிகள் பெயரில் போலி முகநூல் கணக்குகள் தொடங்கி பணம் வசூலிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.


வேலூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.டி.ராமச்சந்திரன் பெயரில் போலியாக முகநூல் கணக்குத் தொடங்கி, மெசஞ்சர் செயலி மூலம் அவரது நட்பு வட்டத்தில் மர்ம கும்பல் பணம் கேட்டுள்ளது.


உஷாரான நண்பர்கள் ஏ.டி.ராமச்சந்திரனுக்குத் தகவல் தெரிவிக்கவே, அவரும் தனது உண்மையான முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை பதிவை போட்டுள்ளார்.


இதே பாணியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் டி.எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ கந்தசாமி பெயரிலும் போலி முகநூல் கணக்குத் தொடங்கி, பணம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது