பல்கலை. பிரிப்புக்கு இன்னும் ஒப்புதல் தரவில்லை - என்ன நடக்கிறது அண்ணா பல்கலைக்கழகத்தில்...

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து தற்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்சி பல்கலைக்கழகம் எனவும் புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் எனவும் பெயரிடப்படும் என அறிவிக்கப்பட்டது.


அதற்கான சட்ட முன்வடிவை தமிழக அரசு நடைபெற்று முடிந்த சட்டபேரவை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தியது அதனையடுத்து சட்டமாக்கவேண்டி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் 3 வாரங்களை கடந்தும் அரசின் முடிவுக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காமல் உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது


அதனைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா சீர்மிகு பல்கலைக்கழகம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் என்றும் 2 ஆக பிரிப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டது அதுகுறித்து ஆராய 5 அமைச்சர்களை கொண்ட குழுவையும் தமிழக அரசு அமைத்தது.


ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்கும் மத்திய மனிதவள அமைச்சகத்தின் அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு 500 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பதால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்பதால் தமிழக அரசு சிறப்பு அந்தஸ்த்தை ஏற்க தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.


இடையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டால் அண்ணா பல்கலைக்கழகமே அதற்கான நிதித்தேவையை பூர்த்தி செய்துகொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.


அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் சிறப்பு அந்தஸ்த்தை ஏற்பதில் சிக்கல் உள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்தது அத்துடன் சிறப்பு அந்தஸ்த்தை தமிழக அரசு ஏற்பது தொடர்பாக மத்திய அரசு நிர்ணையித்த காலக்கெடுவும் முடிவடைந்தது. இந்த நிலையில் தான் மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பது தொடர்பான சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இதுவரை அதற்கான ஒப்புதல் கிடைக்காமல் உள்ளது.