சி.எம்.சி மருத்துவமனை பெயரில் மோசடி போலி மருத்துவர் கைது

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் வேலை என்று ஓ.எல்.எக்சில் விளம்பரம் கொடுத்து ஆண் குரலிலும் பெண் குரலிலும் மாற்றி மாற்றி பேசி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


வேலூர்மாவட்டம்,காட்பாடியை அடுத்த கல்புதூரைச் சேர்ந்த அனிதா, வணிக மேலாண்மை படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.


ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் வரும் வேலை வாய்ப்பு பகுதியை ஆராய்ந்தபோது, சி.எம்.சி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது.


அதில் காணப்பட்ட செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது உதயகுமார் என்ற நபர், தன்னை சி.எம்.சி மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் என அறிமுகம் செய்து பேசியுள்ளான்.


மருந்தகப் பிரிவில் அனிதாவுக்கு வேலை இருப்பதாகவும் அதற்கு 50 ஆயிரம் செலவாகும் எனக் கூறியவன், தாமே விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருவதாகவும் கூறியுள்ளான்.


அதன்படியே கடந்த மாதம் அனிதாவின் வீட்டுக்குச் சென்ற உதயகுமார், சி.எம்.சி மருத்துவமனை பெயரில் போலியாக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பத்தைக் காட்டி பூர்த்தி செய்யக் கூறியுள்ளான். பின்னர் 3 தவணைகளாக அனிதாவிடம் 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளான்.


இடையில் அனிதா சந்தேகம் கொண்டு வேலை குறித்து கேட்டபோது, அதே மருத்துவமனையில் சக மருத்துவராகப் பணிபுரிவதாக சித்தரித்து உஷாராணி என்ற பெயரில் உதயகுமாரே பேசியுள்ளான்.


உதயகுமார் குறிப்பிட்ட தேதியில் சி.எம்.சி மருத்துவமனைக்கு நேரில் சென்று அனிதா விசாரித்தபோது, அப்படிப்பட்ட பெயர்களில் இங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை என கூறியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர், உதயகுமாரின் எண்ணுக்கு அழைத்தபோது, அது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.


தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனிதா, உடனடியாக போலிசில் புகாரளித்துள்ளார். அதன்பேரில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், கீழ்மணவூரைச் சேர்ந்த உதயகுமாரை கைது செய்தனர்.


விசாரணையில் அவன் மீது ஏற்கனவே 2016ஆம் ஆண்டு 2 மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இணையதளங்களில் கவர்ச்சிகரமாக வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை அப்படியே நம்பிவிடாமல், தீர விசாரிக்க வேண்டும் என்கின்றனர்


போலீசார். அதேசமயம் பணம் கொடுத்து குறுக்கு வழியில் பெற நினைக்கும் எந்த வேலையும் சட்டத்தின் பார்வைக்கு வரும்போது ஆபத்தில் முடியும் என்றும் எச்சரிக்கின்றனர்.