“வைஃபை” வசதி கொண்ட டெபிட், கிரெடிட் கார்டுகளைத் திருடி பணம் கொள்ளை... முன்னாள் வங்கி ஊழியர் கைது

சென்னையில் வைஃபை குறியீடு கொண்ட என்.எஃப்.சி ( NFC ) டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை திருடி பணம் கொள்ளையடித்த முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளான்.


ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் வங்கி உட்பட பல தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிவர்த்தனையை எளிதாக்கும் நோக்கில் வைஃபை குறியீடு கொண்ட “நியர் ஃப்ரிக்குவன்சி கார்டு” எனப்படும் என்.எஃப்சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.


இவ்வகை கார்டுகளை அதே என்எஃப்சி தொழில்நுட்பம் கொண்ட பிஓஎஸ் ( POS ) இயந்திரத்தின் அருகில் அரையடிக்கும் குறைவான தொலைவுக்குக் கொண்டு சென்றாலே போதும், நமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும்.


அதே நேரம் ஏடிஎம்முக்குச் சென்றால் பாஸ்வேர்டு போட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும். இந்த வகை கார்டுகள் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


ஐசிஐசிஐ வங்கியின் இந்த வகை நியர் ஃப்ரிக்குவன்சி டெபிட் கார்டை பயன்படுத்திய போரூரைச் சேர்ந்த ஹரி விஸ்வநாதன் என்பவர், கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி அந்தக் கார்டை தொலைத்துவிட்டு, அது பற்றிய கவனமில்லாமல் இருந்துள்ளார்.


அடுத்த இரு தினங்களில் அவரது கணக்கில் இருந்து அடுத்தடுத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்ட பிறகே, கார்டு திருடு போனதை உணர்ந்து உடனடியாக வங்கி கணக்கையும் முடக்கியுள்ளார்.


24 மணி நேரத்துக்குள் புகாரளிக்காமல் தாமதமாக மூன்றாவது நாள் வங்கியில் புகார் அளித்ததால் திருடப்பட்ட பணத்தை திருப்பியளிக்க ஐசிஐசிஐ வங்கி கிளை மறுத்து விட்டது.


இதுதொடர்பான விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் போலீசார், ஹரி விஸ்வநாதன் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் எந்த வங்கி கணக்கிற்கு சென்றது என ஆய்வு செய்து, காட்டுபாக்கத்தை சேர்ந்த சரவணன் என்பவனை கைது செய்தனர்.


ஆக்ஸிஸ் வங்கி கிளை ஒன்றில் 4 ஆண்டுகள் பணிபுரிந்த - சரவணனின் தந்தையும் ஒரு வங்கி ஊழியர். அந்த அனுபவத்தின் மூலம் வங்கி தொடர்பான மோசடியில் ஈடுபட்டுள்ளான் என்கின்றனர் போலீசார்.


போலி ஆவணம் மூலம் சிவக்குமார் என்ற பெயரில் வங்கி கணக்கையும் எஸ்.கே.மோட்டார்ஸ் என்ற பெயரில் போலி நிறுவனத்தையும் தொடங்கி, அதனைக் கொண்டு என்எஃப்சி தொழில்நுட்பம் கொண்ட பேடிஎம் நிறுவன பிஓஎஸ் ஸ்வைப்பிங் மெசினை வாங்கி வைத்திருக்கிறான்.


இதன் மூலம் கிரெடிட் கார்டில் பணம் தேவைப்படுவோருக்கு கமிஷன் முறையில் பணம் எடுத்து கொடுப்பது போன்ற பணிகளை செய்து கொண்டே, நியர் ஃப்ரிக்குவன்சி டெபிட், கிரெடிட் கார்டுகளை திருடி, பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளான்.


வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினாலோ, ஆன் லைன் மூலம் பொருட்களை வாங்கினாலோ சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால், போலி நிறுவனத்தின் பெயரில் ஸ்வைப்பிங் மெஷின் வாங்கி வைத்து மோசடி செய்து வந்துள்ளான் என்றும் போலீசார் கூறுகின்றனர்.


பாஸ்வேர்டு இல்லாமலும் குறிப்பிட்ட தொகையை எடுக்கலாம் என்பதால் இந்த வகை கார்டுகளை மட்டுமே குறிவைத்து திருடியுள்ளான்.


கடந்த 3 மாதத்தில் 6 லட்சம் ரூபாய் வரை இதன் மூலம் திருடியிருப்பதாக கூறும் போலீசார், சரவணனிடம் இருந்து 13 நியர் ஃப்ரிக்குவன்சி டெபிட் டெபிட் கார்டுகள், பே-டிஎம் ஸ்வைபிங் மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


என்எஃப்சி தொழில்நுட்பம் கொண்ட பிஓஎஸ் இயந்திரங்களை வழங்குவதற்கு வங்கிகள் தரப்பில் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள், பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், போலியான நிறுவனம் பெயரில் சரவணன் அந்த இயந்திரத்தை பெற்றது எப்படி என விசாரணை நடைபெற்று வருகிறது.


ஏடிஎம் கார்டுகள் தொலைந்து போனால் வங்கிக்கு உடனே தகவல் தெரிவித்து அவற்றின் செயல்பாட்டை முடக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)