வீட்டுமனை பெற்று தருவதாக தலா ரூ.5 ஆயிரம் வசூல்..! கம்யூனிஸ்டு தோழர் மீது புகார்

கிருஷ்ணகிரி அருகே தமிழக அரசின் இலவச 3 செண்ட் வீட்டுமனை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி 200பேரை அழைத்து வந்த இந்திய கம்யூனிஸ்ட்டு பிரமுகர் ஒருவர், அவர்களை தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைத்து போலீசில் சிக்கவைத்து சென்றதாக புகார் எழுந்துள்ளது.


மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்தாளபள்ளி ஒன்றியத்தில் நடந்த சாலை மறியலில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்வதாக காவல்துறையினர் கூறி வேனில் ஏற்ற முயன்றனர்.


அப்போது போராட்டத்தில் பங்கேற்ற பாஞ்சாலிப்பூர் கிராமப் பெண்கள், தங்களுக்கு தமிழக அரசின் 3 சென்ட் இலவச வீட்டுமனையை பெற்றுத் தருவதாகக் கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஸ்டாலின்பாபு என்பவர் வாடகை ஆட்டோக்களில் ஏற்றி அழைத்து வந்து, போராட்டத்தில் அமரவைத்துச் சென்று விட்டதாகக் கூறியுள்ளனர்.


இதையடுத்து அவர்களை வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்திய போலீசார், திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர். அந்த கிராமத்து பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.


இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் ஸ்டாலின்பாபு கடந்த 3 வருடமாக நிலம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்கள் கட்சி நடத்தும் பல போராட்டங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துக் கொண்டு தேவையில்லாமல் தற்போது மறியல் செய்ய வைத்து தங்களையும் போலீசில் சிக்கவைத்து சென்று விட்டதாகவும் கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள் வேதனை தெரிவித்தனர்.


இது குறித்து கேட்டால் பெண்களை தரகுறைவான வார்த்தைகளால் ஸ்டாலின்பாபு மிரட்டியதாகவும் ஏமாற்றத்துக்குள்ளான பெண்கள் தெரிவித்தனர். பெண்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் ஸ்டாலின்பாபு, பாஞ்சாலிப்பூர் பெண்களை போராட்டத்திற்கு தான் அழைத்து செல்லவில்லை என்றும் அவர்களிடம் தான் எந்த பணமும் பெறவில்லை என்றும் மறுத்ததோடு கடந்த 3 வருடமாக அவர்களுக்கு இலவச வீட்டுமனை கொடுக்க வேண்டும் என்று தான் போராடிவருவதால், இலவச வீட்டுமனை கேட்டு போராட்டம் நடந்த இடத்துக்கு தன்னை சந்திக்க வந்தனர் என கூறினார்.


போராட்டத்திற்கு ஆட்களைச் சேர்க்க அரசியல் கட்சியினர் செய்யும் சித்து வேலைகளில் இதுவும் ஒன்று என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், பொதுமக்கள் தான் தாங்கள் எதற்காக செல்கிறோம் என்பதை உணர்ந்து உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்