அட்டை கொடுத்து வீடு வீடாக ரூ. 30 மொட்டை..! ஒரே ரேசன் கார்டு பெயரில் மோசடி

நாடு முழுவதும் ஒரே ரேசன் கார்டு திட்டம் என்று ஏமாற்றி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வீடு வீடாக சென்று பச்சை வண்ண அட்டை கொடுத்து 30 ரூபாய் வீதம் வசூலித்து பல ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கன்னியாகுமரி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை காலையில் 3 பெண்கள் 2 ஆண்கள் என 5 பேர் கொண்ட கும்பல் வீடு வீடாகச் சென்று தங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரும் அரசு ரேசன் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.


ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவர்களது ஸ்மார்ட் ரேஷன் அட்டையை கேட்டுப் பெற்று ஆய்வு செய்வது போல நடித்து விட்டு, நாடு முழுவதும் ஒரே ரேசன் அட்டை திட்டத்தை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்திருப்பதாக கூறி பச்சை வண்ண அட்டை ஒன்றை கதவிலக்கம் குறிப்பிட்டு கொடுத்துள்ளனர். ரேசன் கார்டுடன் இந்த அட்டையை கொடுத்தால் இந்தியாவில் எந்த ரேசன் கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.


கவர்மெண்ட் ஆப் இந்தியா என்றும் நமது இந்தியா தூய்மை இந்தியா என்றும் குறிப்பிடப்பட்டிருந்த அந்த அட்டையை கொடுத்து விட்டு வீட்டுக்கு 30 ரூபாய் பணம் வசூல் செய்தனர்.


பத்து ஆண்டுகளுக்கு இதே ரேஷன் அட்டையுடன் இதே பச்சை வண்ண அட்டையைப் பயன்படுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி தங்களை அறிமுகம் செய்து கொண்டதால், இவர்களின் பேச்சை நம்பிய பெண்கள் வீட்டிற்கு 30 ரூபாய் வீதம் பணம் கொடுத்துள்ளனர்.


500க்கும் மேற்பட்ட வீட்டைச் சேர்ந்த பெண்கள் தலா 30 ரூபாய் வீதம் கொடுத்து பச்சை அட்டையை பெற்றுக் கொண்ட நிலையில் கதவிலக்கத்தை மட்டும் வைத்து எப்படி ரேசன் பொருள் தருவார்கள் ? என்று சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் விசாரித்தனர்.


இது போன்றதொரு பணிக்காக தாங்கள் அரசு ஊழியர்களை அனுப்பவில்லை என்று கூறியதால் தங்களுக்கு அட்டையை கொடுத்து ஒரு கும்பல் மொட்டையை போட்டு சென்றிருப்பதை தாமதமாக உணர்ந்துள்ளனர் அப்பகுதி பெண்கள். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சந்திப்பில் திரண்ட பொதுமக்கள் தங்களை ஏமாற்றி சென்ற மோசடி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சம்பவ இடத்திற்கு வந்த கோட்டார் போலீசார் அட்டை கொடுத்து அரசு திட்டத்தின் பெயரில் மோசடியில் ஈடுபட்ட வலை வீசி தேடி வருகின்றனர். சிறிய தொகை என்பதால் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.


அதே நேரத்தில் அரசு அதிகாரிகள் என்று வீடுகளுக்கு வருபவர்களிடம் முறையான அடையாள அட்டை உள்ளதா ? என்றும் அவர்களிடம் விரிவாக விசாரித்து விவரங்களை சரிப்பார்த்துக் கொள்வது அவசியம், மேலும் புதிதாக ஒரு திட்டத்தின் பெயரை சொல்லி பணம் கேட்டால் அதனை கொடுக்காமல் இருப்பதே கூடுமானவரையில் நலம் பயக்கும் என்கின்றனர் காவல்துறையினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்