பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சுரங்கச்சாலையில் 3 நாட்களில் 3 விபத்துகள் - என்ன காரணம்

கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள, உலகின் மிக நீளமான சுரங்கச்சாலையான அடல் சுரங்கச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3ம் தேதி திறந்து வைத்தார். இதையடுத்து சுரங்கச்சாலையில் வாகன போக்குவரத்து தொடங்கிய நிலையில், முதல் 3 நாட்களில் 3 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.


இந்த விபத்துகளுக்கு சுற்றுலா பயணிகளின் அலட்சியமும், பொறுப்பற்றத்தன்மையுமே காரணம் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சுரங்கச்சாலையில் செல்பி எடுப்பது, பிற வாகனங்களுக்கு இடையூறு செய்வது என விதிமுறைகள் மீறப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


சுற்றுலா பயணிகள் அத்துமீறல்கள் அனைத்தும் சுரங்கச்சாலையினுள் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து சுரங்கச்சாலையினுள் பயணிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையினர் வகுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


9 கிலோ மீட்டர் தொலைவுள்ள சுரங்கச்சாலையை இரண்டாக பிரித்து, ஒரு பகுதியை குல்லு காவல்துறையினரும், மறுபகுதியை Lahaul-Spiti காவல்துறையினரும் கண்காணிப்பார்கள் என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சுரங்கச்சாலையின் இருபகுதிகளிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, உதவி ஆய்வாளர் அளவிலான அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் இமாச்சல் பிரதேச டிஜிபி தெரிவித்துள்ளார்.


வாகனங்களுக்கான தடுப்புகள் அமைக்கப்பட உள்ளதுடன், வெடி மற்றும் பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தெளிவு பெறுவதற்காக, போலீஸ் ஐ.ஜி தலைமையிலான குழுவினர் காஷ்மீரில் உள்ள ஷியாம் பிரசாத் முகர்ஜி சுரங்கச்சாலையை பார்வையிட திட்டமிட்டுள்ளனர்.


இந்நிலையில், சுரங்கச்சாலையில் பயணிப்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை குல்லு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சுரங்கச்சாலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.


அவசர வெளியேறும் பாதைகளில் தேவையின்றி ஆட்கள் நடமாடவோ வாகனங்களை நிறுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.


அவசியமற்ற வகையில் வாகனங்களை நிறுத்துவது, பிற வாகனங்களை முந்திச் செல்வது, அதிவேகம் ஆகியவற்றின் மீது மோட்டார் வாகன சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)