250 சவரன் கொள்ளை.. மும்பையில் கொள்ளையன்..

சென்னை தியாகராயரில் கொள்ளையடிக்கப்பட்ட 250 சவரன் நகைகள் உருக்கிய தங்கக் கட்டிகளாக மும்பையில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்த நகைகளை வாங்க மறுத்த மும்பை வியாபாரியை சுமார் 6 மணி நேரமாக பேசி சமாதானம் செய்து விற்று வந்தது வெளியாகியுள்ளது.


இதற்கிடையே கொள்ளையன் மும்பையில் பதுங்கியுள்ளானா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றாம் தேதி, தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவில் உள்ள நூருல் ஹக் என்ற தொழிலதிபர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.


விசாரணையில் வீட்டில் தங்கியிருந்த மொய்தீன் என்பவர் 9 ஆட்களை தயார் செய்து, கடத்தல் நாடகமாடி கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி மும்பையில் விற்றது, மொய்தீன் தன் உறவினர்களிடம் பேசிய செல்போன் பதிவுகள் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து மும்பை விரைந்து சென்று முழு நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


முன்னதாக கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்க மும்பை வியாபாரி மறுத்ததாகவும் 6 மணி நேரம் கடையிலேயே அமர்ந்து அவரை சமாதானம் செய்து நகைகளை மொய்தீன் விற்று வந்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.


வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்த போலீசாரை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தி.நகர் துணை ஆணையர் ஹரி கிரண், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனக்கு 40 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என சக கூட்டாளிகளை நம்ப வைத்து திட்டமிட்டு இந்தக் கொள்ளையை மொய்தீன் அரங்கேற்றி இருப்பதாகக் கூறினார்.


நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த மொய்தீன் அதன் அடிப்படையில் நகைகளை கொள்ளையடித்து விற்று விடலாம் என்ற திட்டத்துடனே நூருல் ஹக் வீட்டில் தங்கியிருந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.


திருடிச் செல்லப்பட்ட கார் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது என்றும் விரைவில் அது மீட்கப்பட்டு, மொய்தீனும் கைது செய்யப்படுவான் என்றும் கூறினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)