கொரோனாவால் தனிமைப்படுத்திய வீட்டில்.. 250 சவரன் நகை, கார் கொள்ளை..! கொரோனாவையும் வாங்கிச் சென்ற கொள்ளையர்கள்

சென்னையில் கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டிருந்தவர்களின் வீட்டில் புகுந்து, வயதான தம்பதி உட்பட 7 பேரை அரிவாளை காட்டி மிரட்டி கட்டிப்போட்ட கொள்ளை கும்பல், 250 சவரன் தங்க நகைகள், கார் ஆகிவற்றை கொள்ளையடித்ததோடு, கொரோனாவையும் வாங்கிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.


துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்ற 71 வயதான முதியவர் நூரில்ஹக், சென்னை தியாகராய நகர், சாராதாம்பாள் தெருவில், மனைவி ஆயிஷா மற்றும் மனைவியின் சகோதரர் தானிஷ் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.


கடந்த 10 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த உறவினர்கள் மொய்தீன் மற்றும் முஸ்தபா ஆகியோரும் அவர்களுடன் வந்து தங்கியுள்ளனர்.


இந்நிலையில் புதன்கிழமை இரவு வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முகக்கவசம் அணிந்தபடி வந்த 8 பேர் கொண்ட கும்பல், வீட்டு வாசலில் படுத்திருந்த கார் ஓட்டுநர் அப்பாஸை அரிவாளைக் காட்டி மிரட்டி, வாயில் துணியை திணித்து கைகளை கட்டிப்போட்டு வீட்டிற்குள் இழுத்துச் சென்றது.


தொடர்ந்து முதியவர் நூரில்ஹக், அவரது மனைவி ஆயிஷா, தானிஷ் மற்றும் உறவினர்கள் முஸ்தபா, மொய்தீன் உள்ளிட்ட 7 பேரையும் வீச்சரிவாளை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டி அவரவர் அறைகளில் தள்ளி அந்த கும்பல் பூட்டியது.


பின்னர் வீட்டிலிருந்த 250 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய், விலையுயர்ந்த கடிகாரம், செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பல், உறவினர்களாக வந்து தங்கியிருந்த மொய்தீனையும், முஸ்தபாவையும் கட்டப்பட்ட நிலையில், வாசலில் நின்றிருந்த காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.


மேலும் ஆட்டோ ஒன்றையும் திருடி சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் வீடுதிரும்பிய உறவினர் முஸ்தபா, ஜிஎன் செட்டி ரோட்டில் தன்னை இறக்கிவிட்டு ஆட்டோவை கொடுத்து அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார்.


பின்னர் கட்டப்பட்டிருந்தவர்களை விடுவித்து, போலீசாருக்கு தகவலளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தியாகராயநகர் துணை ஆணையர் ஹரிகிரன் கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.


கொள்ளை கும்பலிடம் இருந்து தப்பி வந்த முஸ்தபாவிடம் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வைத்து புதன்கிழமை இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர்.


இதனிடையே வியாழக்கிழமை காலை கொள்ளை நடந்த வீட்டிற்கு சுகாதார துறையினர் வந்த போது தான் முதியவர் நூரில் ஹக், அவரது மனைவி ஆயிஷா, கார் ஓட்டுநர் அப்பாஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டு தனிமையில் இருந்ததும், மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வைத்திருந்ததும் தெரிய வந்தது.


பரிசோதனை முடிவில் முஸ்தபாவுக்கும் கொரோனா உறுதியானதால், பரிசோதிக்க வந்த சுகாதார துறையினர், அவரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.


தகவலறிந்ததும் அவரிடம் விசாரணை நடத்திய உதவி ஆணையர், ஆய்வாளர், காவலர்கள் ஆகியோரும் அதிர்ச்சியடைந்தனர். அவரை விசாரிப்பதா அல்லது விடுவிப்பதா என குழம்பிப்போன போலீசார், ரோந்து வாகனத்தில் ஏற்றி அதில் பயணித்து கொண்டே விசாரித்து வருகின்றனர்.


மற்றொரு புறம் வீச்சரிவாளுடன் உள்ளே புகுந்து கொள்ளையடித்த பொருட்களோடு கொரோனாவையும் வாங்கிச் சென்ற கும்பலையும், சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தேடி வருகின்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா