ரூ.25 லட்சம் பரிசு என வலை விரித்து வாட்ஸ் ஆப் மூலம் நூதன மோசடி

தங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் அனுப்பி, வங்கி தகவல்களை பெற்று, ஆன்லைனில் நுாதன மோசடி நடந்து வருகிறது.சமீபகாலமாக, 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன்களில், 'வாட்ஸ் ஆப்' மூலம் ஒரு தகவல் வருகிறது.


அதில், உங்களது மொபைல் எண்ணுக்கு, 'கோன் பனேகா க்ரோர்பதி' எனும், கே.பி.சி., லாட்டரி மூலம், தங்களுக்கு,25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது என தகவல் வருகிறது.


மேலும், அதற்கான காசோலை உள்ளிட்டவைகளை படங்களாக அனுப்பி, உடனே நீங்கள், 'வாட்ஸ் ஆப்' மூலம் குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் எனக் குறிப்பிட்டிருக்கும்.


லாட்டரி எண் - 8991; பெரும்பாலும், அனைவருக்கும் இதே எண் தான். ஹிந்தியில் வாழ்த்து தகவல்களை பார்த்த பலரும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் போது, மும்பையிலிருந்து பேசுவதாகவும், தங்களுக்கு, 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்துள்ளது என, ஹிந்தியில் பேசி வாழ்த்து கூறுவர்.


பின், உங்களது போட்டோ, வங்கி கணக்கு எண், ஆதார் கார்டு உள்ளிட்டவை அனுப்புங்கள் என்று கூறுவர். சிறிது நேரம் கழித்து, இன்னொரு மேலாளர் பேசுவார். அவர், 'நீங்கள், விபரங்களை உடனே அனுப்புங்கள், அது கிடைத்ததும், உங்களது ஜில்லாவில், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில், உங்களுக்கு, 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படும்' என, கூறுவார்.


இடையில் அடிக்கடி, பலர் அதிகாரிகள் என கூறி, ஹிந்தியில் பேசி உற்சாகத்தை தருவர். இதை நம்பி, பொருளாதார சிக்கலில் உள்ள பலர், விபரங்களை கூறுவர். அவர்களது, தகுதிக்கேற்ப, வார்த்தை ஜாலங்களில் பேசி, 25 ஆயிரம் ரூபாயை முதலில் கட்ட வைத்து விடுகின்றனர்.


பின், வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் சத்தமே இல்லாமல் ஆன்லைனில் சுருட்டி விடுகின்றனர். இதில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள, 100 மொபைல் எண்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்து, மோசடியில் ஈடுபடுகின்றனர்.


இதற்காக உருவாக்கப்படும், கே.பி.சி., எனும் வாட்ஸ் ஆப் குரூப்களை, எந்த எண்ணில் உள்ளவர்களையும், அவர்களுக்கு தெரியாமல் அட்மினாக பதிவு செய்து விடுகின்றனர்.


மன உளைச்சல் இதுபோன்ற பதிவுகளை பார்த்ததும், குரூப்பில் சேர்ந்த சிலர், அட்மினிடம், 'சார், நீங்கள் யார், என்னை ஏன் குருப்பில் சேர்த்தீர்கள்' என, கேள்வி கேட்கும் போது தான், அவருக்கே இந்த விபரம் தெரிய வருகிறது.


உடனே, அவரும், 'இது மோசடியாக உள்ளது. எனவே, இந்த குரூப்பில் இருந்து வெளியேறுங்கள்' எனக் கூறி, அவரும் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அப்பாவி பொது மக்களுக்கு தெரியாமல், எஸ்.பி.ஐ., - கே.பி.சி., லாட்டரி வின்னர்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் லாட்டரி வின்னர்ஸ் போன்ற குரூப்களில் சேர்ப்பதும், இதுபோன்று அட்மின் என போடுவதும், பலரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.


மோசடி கும்பலை சேர்ந்தவர்கள், ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட அனைத்து கம்பெனிகளை சேர்ந்த மொபைல் எண்களையும், ஒரு குறிப்பிட்ட வரிசையில், 100 பேர் அளவிற்கு தேர்வு செய்து, ஏமாற்றுவதற்கு வசதியாக, குரூப்பில் சேர்க்கின்றனர்.


இதுபோன்ற மோசடியில் பாதிக்கப்பட்டவர்களும், உஷாராக தப்பிய நபர்களும், காவல் துறையில் புகார் அளிக்க முன்வருவதில்லை.'வாட்ஸ் ஆப்'பில் இதுபோன்று நவீன யுக்திகளுடன், அப்பாவி மக்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் கும்பலை பிடிக்க, காவல் துறை ரகசிய நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். - நமது நிருபர் -


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை