சகோதரிகள் நிம்மதியாக படிப்பதற்காக, டீ விற்கும் 14 வயது சிறுவன்!

தனது சகோதரிகள் எந்த இடையூறும் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக 14 வயது சிறுவன் டீ விற்பனை செய்து வருவது பாராட்டுக்களை பெற்றுள்ளது. 


 


கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பல குடும்பங்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். அதில் டெல்லியை சேர்ந்த சுபானும் ஒருவர். 14 வயதான சுபான் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். அவரது தந்தை 12 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்டார். இதனால் தாயின் வருமானத்தை நம்பியே குடும்பத்தினர் இருந்துள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பால் வேலையை இழந்த அவர், குடும்பத்தை சமாளிக்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். 


 


தனது சகோதரிகள் நன்றாக படிக்க வேண்டும் என நினைத்த சுபான், தினமும் டீ விற்று வருகிறார். நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சமயத்தில், தனது குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என நினைத்ததால் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுவன் சுபான் கூறுகையில், ‘எனது சகோதரிகள் ஆன்லைன் வகுப்பில் படித்து வருகிறார்கள். அவர்களுக்காக நான் வேலை செய்கிறேன். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும், நானும் படிப்பேன். அதுவரை டீ விற்பனை செய்வேன். தினமும் நான் சம்பாதிக்கும் பணத்தை எனது தாயிடம் கொடுத்து உதவுகிறேன்’ என்றார். 


 


சிறுவயதிலேயே பொறுப்புடன் இருக்கும் சிறுவன் சுபானுக்கு, பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அவரும் நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.