தருமபுரியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பெரியசாமி என்பவர் போக்சோ சட்டத்தில் கைது

தருமபுரி அருகே வீட்டில் தனியாக இருந்த 6ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக, பெரியசாமி என்பவரை தருமபுரி மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோருடன் வசிப்பவர் 11 வயது சிறுமி. அருகிலுள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.


தருமபுரி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த, டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி பெரியசாமி (28), சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் பேச்சுக் கொடுத்து ஏமாற்றி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


அங்கு, சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.


இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தா வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்ட விசாரணையில் சம்பவம் நடந்தது தெரியவந்தது.


இதையடுத்து இளைஞர் பெரியசாமியை போக்சோ சட்டத்தின் (5/L,6-பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின்) கீழ் போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.