ரூ.10 ஆயிரம் கடனுக்கு அலையும் மாற்றுத் திறனாளி
சீர்காழி: கரோனா பொதுமுடக்கத்தால் செய்து வந்த தொழில் பாதிப்படைந்ததையொட்டி தொழிலை மேம்படுத்தி தொடர வங்கிக் கடன் கேட்டு சீர்காழியைச் சேர்ந்த மாற்றுதிறனாளி கடந்த 3மாதங்களாக அலைந்துவருகிறார்.
அவருக்கு உரிய தீர்வு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சீர்காழி பிடாரிகீழ வீதியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளி எம்.நடராஜன் (51). இவர் போலியோ பாதிப்பால் கால்கள் செயலிழந்தவர். திருமணமாகி தற்போது சீர்காழி தேர் வடக்கு வீதி சட்டநாதர் கோயில் வடக்கு கோபுர வாசல் அருகே பெட்டிக் கடை வைத்து நடத்திவருகிறார்.
கோயிலுக்கு தேவையான அர்ச்சனை பொருள்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை விற்று நாள் ஒன்றுக்கு ரூ.200 வரை அமர்ந்த இடத்திலேயே சம்பாதித்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார் நடராஜன்.
உலகம் முழுதும் உயிருக்கும் உடலுக்கும் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா தொற்று தமிழகத்திலும் பரவியதையடுத்து கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதுபோல் திருக்கோயில்களும் பக்தர்கள் வருகைக்கு தடை விதித்து மூடப்பட்டன. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் நடைபெற்றுவந்த தொழில் முடங்கியது. 5 மாதங்களாக பெட்டிக்கடை முற்றிலும் பூட்டிவிட்டாலும் குடும்பத்தை நடத்தவேண்டிய கட்டாயத்தில் நடராஜன் தனது மூன்று சக்கர சைக்கிளில் எண்ணை, பிஸ்கெட், அப்பளம், வேர்கடலை, திரிநூல், தீப்பெட்டி போன்ற சிறிய அளவில் பொருள்களை தெருத் தெருவாக சுற்றித் திரிந்து விற்பனை செய்யத் தொடங்கினார்.
காலை முதல் மாலை வரை மூன்று சக்கர சைக்கிளை தனது கைகளால் சுழற்றி சுற்றி வந்தாலும் நாள் ஒன்றுக்கு ரூ.100 மட்டுமே வருமானம் கிடைத்தது. குடும்பத்தை நடத்திட கஷ்டப்பட்டு வரும் நடராஜன், சீர்காழி மத்திய கூட்டுறவு வங்கியில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சிறுதொழில் மேம்பாட்டிற்காக ரூ.10ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
கடன் பெறுவதற்கான அனைத்து படிவங்கள், சான்றிதழ்களையும் இணைத்து விண்ணப்பம் செய்து 3 மாதங்களாக அலைகழிக்கப்பட்டு வரும் நடராஜனுக்கு இதுவரை கடன் தொகை கிடைக்கவில்லை. இந்த கடன்தொகையை பெற்று முன்புபோல் தனது பெட்டிக்கடையை மேம்படுத்தி அமர்ந்த இடத்திலேயே தொழில் செய்ய நினைத்த நடராஜனுக்கு மன உளைச்சலே மிஞ்சியது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மாற்றுதிறனாளி நடராஜனுக்கு வங்கி கடன் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.