வேறு ஒருவர் பெயரில் வங்கியில் கிரெடிட் கார்ட் வாங்கி ரூ.10 லட்சம் திருட்டு- ஹெல்மெட்டால் சிக்கியது எப்படி

சென்னையில் மருத்துவமனை ஊழியரின் கிரெடிட் கார்டை பிளாக் செய்து, அவர் பெயரிலேயே புதிய கிரெடிட் கார்டு வாங்கி பயன்படுத்தி ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். கிரெடிட் கார்டு அப்ளை செய்து, வாடிக்கையாளர்போல் வங்கியிலும், வங்கியில் இருந்து பேசுவதுபோல் வாடிக்கையாளரிடமும் பேசி மோசடியை அரங்கேற்றியுள்ளார் ஒரு இளைஞர்.


இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு ஹெல்மெட் பெரிதும் உதவியுள்ளது. சென்னை அடுத்த முகலிவாக்கத்தை சேர்ந்தவர் 55 வயதான இருதயராஜ். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் இவருக்கு விபத்து ஏற்பட்டதால் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.


சில மாதங்களுக்கு முன்பு இருதயராஜுக்கு வங்கியில் இருந்து பேசுவதாகவும், பழைய கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு, அப்டேட் ஆன புதிய கார்டு கொடுப்பதாக கூறி உள்ளனர். கார்டு பற்றிய விபரங்களை கேட்க அவரும் தெரிவித்துள்ளார். திடீரென அவரது கிரெடிட் கார்டில் இருந்து ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 5 லட்சம் ரூபாய், 5 லட்சம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளதாக இருதயராஜ் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.


தன்னிடம் கிரெடிட் கார்டு உள்ள நிலையில், ஏதோ தவறாக குறுந்தகவல் வருவதாக நினைத்து, கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். பின்னர் வங்கியில் இருந்து பேசிய ஊழியர், புதிய கிரெடிட் கார்டில் ஒரே நேரத்தில் 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்தது நீங்கள்தானா எனக் கேட்டுள்ளனர்.


இல்லை என்றும், தனக்கு புதிதாக கிரெடிட் கார்டு எதுவும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வங்கி ஊழியரின் அறிவுறுத்தலின் பேரில், சைபர் கிரைம் போலீசாரிடமும், மாங்காடு போலீசிலும் இருதயராஜ் புகார் அளித்தார்.அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்தியன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணையில், இருதயராஜ்க்கு தெரியாமலேயே அவரது பெயரில் இருந்த கிரெடிட் கார்டை பிளாக் செய்து விட்டு புதிதாக கிரெடிட் கார்டை வாங்கி இருப்பது தெரியவந்தது இருதயராஜ் செல்போனுக்கு வந்த அழைப்புகளின் எண்களை வைத்து விசாரணை செய்தனர்.


தொடர் விசாரணையில் கோயம்பேட்டை சேர்ந்த 28 வயதான மென் பொறியாளர் கார்த்திகேயன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கிரெடிட் கார்டு மோசடி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியானது. கார்த்திகேயன் தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு சம்பந்தமாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பேசும் கஸ்டமர் கேர் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். கிரெடிட் கார்டில் அதிக தொகை வைத்திருக்கும் நபர் யார் என்பது குறித்த தகவல் அவருக்கு முழுமையாக தெரிந்துள்ளது.


கிரெடிட் கார்டு சம்பந்தமான மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றாலும் குற்றவாளிகள் அதில் அதிக அளவில் சிக்குவதில்லை என்பதால் அதில் மோசடி செய்ய முடிவு செய்தார். இதற்காக அவர் இருதயராஜை தேர்வு செய்துள்ளார். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது கிரெடிட் கார்ட்டை முதலில் பிளாக் செய்துள்ளார். பின்னர் அவரது பெயரில் அவருக்குத் தெரியாமலேயே புதிதாக ஒரு கிரெடிட் கார்டை வங்கியில் அப்ளை செய்து உள்ளார்.


தனை பெற அவரது வீட்டிற்கு முதலில் ஒரு கொரியர் அனுப்பி உள்ளார். அந்த கொரியரை கொண்டு வரும் ஊழியர் யார் என தெரிந்து கொண்டுள்ளார். கார்த்திகேயனே இருதயராஜ் வீட்டிற்கு அருகில் சென்று வீட்டின் உரிமையாளர் போல் நின்று கொரியரை வாங்கியுள்ளார்.


கொரியர் பாய்க்கு 100 ரூபாய் டிப்ஸ் கொடுத்து சந்தேகம் வராமல் பார்த்துக்கொண்டுள்ளார். அதன் பிறகு மீண்டும் கிரெடிட் கார்டை அனுப்பி அந்த கிரெடிட் கார்டை கொரியர் அலுவலகத்திற்கே சென்று கையெழுத்து போட்டு வாங்கி உள்ளார். பின்னர் இருதயராஜ் போன்று வங்கியிலும், வங்கியில் இருந்து பேசுவதுபோல் இருதயராஜிடமும் பேசி புதிய கிரெடிட் கார்டின் ரகசிய எண்ணை பெற்றுள்ளார். அரக்கோணத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து வேறு வங்கியில் போலியாக ஸ்வைப்பிங் மெஷினை வாங்கி அதில் இந்த கார்டை பயன்படுத்தி உள்ளார்.


ஆனால் இந்த பணம் கார்த்திகேயன் வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்குள் போலீசார் ராஜ்குமார் பெயரிலான அந்த கணக்கை வங்கி அதிகாரிகளிடம் பேசி முடக்கியுள்ளனர். வங்கி கணக்கில் இருந்து பணம் ஏன் இன்னும் வரவில்லை என்று வங்கி அதிகாரிகளிடம் பேசும் போது, செல்போன் லொகேஷனை வைத்து கார்த்திகேயனை கைது செய்தனர்.


அவரிடம் இருந்து ஏராளமான கிரெடிட் கார்டுகள் மற்றும் ஸ்வைப் மெசின், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிப்பதற்கு ஹெல்மெட் பெரிதும் உதவியுள்ளது. கொரியர் அலுவலகம் மற்றும் கொரியர் வாங்க வரும் போதும் வங்கிக்கு செல்லும் போதும் ஹெல்மெட்டுடனே சென்றுள்ளார். அந்த ஹெல்மெட்டும், இருசக்கர வாகனத்தின் எண்ணையும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)