மெரினாவில் கூடும் மக்கள்: தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் போலீசார் September 13, 2020 • M.Divan Mydeen கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுகிழமைகளில் பிறப்பிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு கடந்த வாரத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, சென்னை மக்கள், அதிகம் விரும்பும் இடமான மெரினாவுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது. இன்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மெரினாவுக்கு மக்கள் அதிக அளவில் வருகின்றனர். கடற்கரை பகுதிக்குள் செல்வதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மெரினாவுக்கு வரும் அனைத்து வழிகளும் தடுப்பு வேலிகள் மூலம் அடைக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் உள்ளே செல்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக கடற்கரை பகுதி முழுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளே வர விரும்புபவர்களை திருப்பி அனுப்புவதே பெரும் சிரமமாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.பொதுமக்கள் யாரும் தயவு செய்து மெரினாவுக்கு வரவேண்டாம் அப்படி வந்தால் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.