கோவையில் வீடு இடிந்து விழுந்து விபத்து : இருவர் உயிரிழப்பு; தொடரும் மீட்புப்பணி

கோவையில் கனமழை காரணமாக செட்டி வீதியில் உள்ள வனஜா என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டடம் நேற்றிரவு இடிந்தது. அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், அருகிலுள்ள ஓட்டு வீடும் இடிந்தது.


உடனடியாக தீயணைப்பு, மீட்புப்பணி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளில் 8 பேர் சிக்கிக்கொண்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்தது.


ஸ்வேதா என்ற 27 வயது பெண், கோபால்சாமி என்ற 70 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. விடிய விடிய நடைபெற்ற மீட்புப்பணியில், 6 வயது சிறுவன் உள்பட 4 பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கஸ்தூரியம்மாள், மணிகண்டன் ஆகிய 2 பேரை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.