பெரியார் சிலை அவமதிப்பு: ராமதாஸ், கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், வாசன் கண்டனம்

பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது இன்று (செப். 27) காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணிகண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப்படுத்தினர்.


இது தொடர்பாக, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமதாஸ், நிறுவனர், பாமக திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவச் சிலை மீது காவிச் சாயம் பூசியும், காலணி மாலை அணிவித்தும் அவமரியாதை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோழைத்தனமான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.


அண்மைக்காலமாகவே கொள்கை அடிப்படையில் எதிர்கொள்ள முடியாத தலைவர்கள் மீது காவிச் சாயம் பூசியும், காலணி மாலை அணிவித்தும், சிலையின் பாகங்களைச் சேதப்படுத்தியும் அவமதிப்பது அதிகரித்து வருகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சிலை கூட இதற்குத் தப்பவில்லை. சிலர் இத்தகைய செயல்களைச் செய்து அதன் மூலம் தங்களின் முகத்தில் தாங்களே கருப்பு சாயத்தைப் பூசிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். கொள்கையைக் கொள்கையால் எதிர்கொள்ள முடியாத கோழைகளும், மக்களின் ஆதரவைப் பெற முடியாதவர்களும்தான் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவார்கள். அவர்களைத் தப்பவிடக் கூடாது.


அண்மையில் கோவையில் பெரியாரின் சிலையை அவமதித்தவர்கள் மீதும், இந்து மதம் குறித்து தவறாகப் பேசியவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அதற்குப் பிறகும் இத்தகைய செயல்களில் ஈடுபட சில மிருகங்கள் துணிகின்றன என்றால், அவர்களின் பின்னணியில் மிகப்பெரிய சக்திகள் இருக்கின்றன என்றுதான் அர்த்தம். தமிழ்நாட்டில் அமைதியைக் குலைத்து, நல்லிணக்கத்தைச் சிதைத்து அரசியல் லாபம் தேடும் சக்திகள்தான் இத்தகைய செயல்களை ஊக்குவிக்கக்கூடும். இத்தகைய செயல்களை இனியும் அரசு அனுமதிக்கக் கூடாது. சிலைகளை அவமதிப்பவர்களை விட, அவ்வாறு செய்யும்படி மற்றவர்களைத் தூண்டுபவர்கள்தான் மிகவும் கொடியவர்கள்; ஆபத்தானவர்கள். அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்துச் சட்டங்களின்படியும் மிகக் கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க உளவுத்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத்தில் பெரியாரின் உருவச் சிலையை அவமதித்தவர்களைக் கைது செய்து மிகக் கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அது தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சிதைக்க முயல்வோருக்கு மறக்க முடியாத பாடமாக அமைய வேண்டும். கே.எஸ்.அழகிரி, தலைவர், தமிழக காங்கிரஸ் திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணம் பூசி வகுப்புவாத சக்திகள் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர்.


இத்தகைய அவமதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழ்ச் சமுதாயத்திற்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதியைப் பெற்றுத்தந்த தந்தை பெரியார் சிலையைக் களங்கப்படுத்துகிற வகையில் செயல்படுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்களைத் தமிழக அரசு உடனடியாக கைது செய்யவேண்டும். அதைச் செய்ய தமிழக அரசு தவறுமேயானால் கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும் என எச்சரிக்கிறேன். கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர்.


சமூக விரோதக் கும்பல்களின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்குக் காவிச் சாயம் பூசுவது, சேதப்படுத்துவது, இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் மதவெறி சக்திகள் தங்களது அரசியல் லாபத்திற்காக அவர்களது தலைவர்களின் ஆசியுடன் செய்து வருகின்றனர்.


இதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்ற அவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பெரியார் சிலையை அவமதிக்கும் வகையில் இழிவுபடுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.


ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சியில் பெரியார் சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்தியவர்கள் கண்டனத்துக்குரியவர்கள் மட்டுமல்ல தண்டனைக்குரியவர்கள். மேலும், மறைந்த தலைவர்கள் சிலைக்கு அவமதிப்பு செய்பவர்களின் தவறான செயல்பாடு ஒருபோதும் ஏற்புடையதல்ல. இந்தச் செயல் இனிமேலும் தொடரக் கூடாது. இவ்வாறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்