அமெரிக்காவுடன் மோதல்.... ஈரானின் முப்படைகளும் இணைந்து பிரமாண்ட போர் ஒத்திகை!

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் போர்ப் பதற்றம் நிலவும் சூழலில், ஈரான் தனது வருடாந்திர போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது.


ஹோர்முஸ் நீரிணையில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த ராணுவ ஒத்திகை வளைகுடா நாடுகளில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.


சோல்ஃபகார் - 99 என்று பெயரிடப்பட்ட போர் ஒத்திகையானது ஓமன் வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இருபது லட்சம் கி.மீ பரப்பளவில் நடைபெறுகிறது. இதில், ஈரான் நாட்டில் கடற்படை, தரைப்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் ஒருங்கிணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த போர் ஒத்திகையில் ஈரான் நாட்டின் நீர் மூழ்கிக் கப்பல்கள், ட்ரோன் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.


தரையிலிருந்து பாய்ந்து சென்று தரையிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள், தானியங்கி பீரங்கிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் போர் ஒத்திகை நடத்தப்படுகிறது.


இதேபோல் விமானப்படையினர் வானிலிருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பது, கடற்படையினர் நிலப்பகுதிக்கு ஊடுருவுவது போன்ற ஒத்திகையும் நடைபெறுகிறது.


அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் மோதல் போக்கு நிலவும் சூழலில் ஈரான் நடத்தும் இந்தப் பிரமாண்ட போர் ஒத்திகை, சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது ஈரான் போர் ஒத்திகைக்குத் தலைமை தாங்கி வழிநடத்தும் தளபதி ஹோபிபோல்லா சய்யாரி, “ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்தப் போர் ஒத்திகையானது வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிநாட்டுப் படையெடுப்பை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.


சய்யாரியின் பேச்சு நேரடியாக அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் குறிப்பிடுவதாகச் சர்வதேச நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையானது அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து மீண்டும் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அமெரிக்காவின் முயற்சியை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 13 நாடுகள் எதிர்த்தன.


அக்டோபர் மாதத்துக்குள் மீண்டும் எப்படியாவது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனும் முடிவில் தீர்க்கமாக உள்ளது அமெரிக்கா. இதனால், தனது ராணுவ பலத்தை வெளிப்படுத்தும் விதத்தில் மிக அதிக செலவில் இந்தப் பிரமாண்ட ராணுவ ஒத்திகையை நடத்தியுள்ளது ஈரான்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!