நாளை மறுநாள் மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: யாருக்கு ஆதரவு அதிகம்

மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஹரிவன்ஷ் சிங்கும், எதிர்கட்சிகள் சார்பில் ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜாவும் போட்டியிடுகின்றனர்.


நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத்தலைவராக இருந்த ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஹரிவன்ஷ் சிங்கின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது.


இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.யான ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிடுகிறார்.


அதற்காக இரு தினங்களுக்கு முன்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான வெள்ளிக்கிழமை, எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜாவும் வேட்புமனு தாக்கல் செய்தார்.


தற்போதைய மாநிலங்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 123 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 11-ஆக தற்போது உள்ளது.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் 60-ஆக உள்ளது. திரிணாமுல், இடதுசாரிகள், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளின் பலம் 67 ஆகவும் உள்ளது.


அவற்றில் திரிணாமூல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட 12 கட்சிகள் மனோஜ் ஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவற்றோடு சேர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் 91-ஆக உள்ளது.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், பிற எதிர்க்கட்சிகளும் முழுமையாக இணைந்தால் மட்டுமே பாஜக கூட்டணி வேட்பாளரை தோற்கடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.


ஆனால் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளருக்கு, பிற எதிர்கட்சிகளிடம் இருந்து ஆறு வாக்குகள் கிடைத்தால் பெரும்பான்மை வெற்றி எளிதில் கிடைத்துவிடும். நவீன் பட்நாயக்கின் பிஜு ஜுனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பீகார் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.