துரைமுருகன் ஆதரவாளர் வீட்டில் திடீர் சிபிஐ ரெய்டு!

கடந்த முறை நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் சமயத்தில், காட்பாடி காந்தி நகரிலுள்ள தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் வீட்டிலிருந்து 10 லட்ச ரூபாயை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.


இதைத் தொடர்ந்து, காட்பாடியை அடுத்திருக்கும் பள்ளிக்குப்பம், மோட்டூரில் வசிக்கும் துரைமுருகனுக்கு நெருக்கமானவரும், வேலூர் மாநகர தி.மு.க-வில் விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளராகவும் இருப்பவர் பூஞ்சோலை சீனிவாசன். இவருக்குச் சொந்தமான சிமென்ட் குடோனிலிருந்து மூட்டை மூட்டையாக ரூ.10.57 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


2019 மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பாக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிட்டனர்.


அப்படியான சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் போது துரைமுருகன் வீடு, கல்லூரி மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. பள்ளிக்குப்பம் பகுதியில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த சோதனையில் 11.48 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.


தாமோதரனின் மைத்துனரான பூஞ்சோலை சீனிவாசன், அந்தப் பணம் தனக்கு சொந்தமானது எனவும், வாக்காளர்களுக்கு அளிக்க வைத்திருந்ததாகவும் வருமான வரித் துறையிடம் தெரிவித்தார்.


இவர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக அப்பகுதியில் அறியப்படுகிறார். இதனை அடிப்படையாக வைத்து வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் கதிர் ஆனந்த் மீது தவறான அபிடவிட் தாக்கல் செய்தல் 125 (A) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது 171(E) லஞ்சம் கொடுக்க முயற்சித்தல், 171(B)(2) குறிப்பிட்ட செயலை செய்ய பணம் கொடுக்க முயற்சித்தல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.


வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு, புத்தம் புதிதாக அச்சிடப்பட்ட 200 ரூபாய் நோட்டுக்களை அளித்ததாக கனரா வங்கியின் வேலூர் மண்டல மூத்த மேலாளர் தயாநிதி மீது குற்றம்சாட்டப்பட்டது.


தொடர்ந்து, தயாநிதி, தாமோதரன், பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அடையாளம் தெரியாத மக்கள் பிரதிநிதிகள், தனி நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 120 (பி) (குற்றச் சதி), 420 (மோசடி) மற்றும் 477 ஏ (கணக்குகளை பொய்யாக காட்டுதல் ) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7 (சி) பிரிவுகளின் கீழ் சிபிஐ கடந்த 22ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது.


எனினும், இதில் கதிர் ஆனந்தின் பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 24) காலை சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் நான்கு பேர், பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அவரிடம் மூன்று மணி நேரம் விசாரணை செய்தனர்.


சன்னல், கதவுகளை பூட்டிவிட்டு வீடு முழுவதையும் சோதனைக்கு உட்படுத்தினர். வாக்காளர்களுக்கு பணம் அளிக்க வைத்திருந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. இதேபோலவே, தாமோதரனுக்கு சொந்தமான இடங்கள், கனரா வங்கியின் முன்னாள் மூத்த மேலாளர் தயாநிதி வீட்டிலும் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் வேலூர் தேர்தல் பணப் பறிமுதல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)