போலி விவசாயிகளால் நல்ல திட்டம் நிறுத்தி வைப்பு... துணை போன அதிகாரிகள் அதிரடி இட மாற்றம்!

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் ரூ 110 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதால், அந்தத் திட்டத்தையே தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக வேளாண்மை துறை அறிவித்துள்ளது.


பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் ரூ.110 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இது தொடர்பாக 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது , போலி விவசாயிகளான பயனடைந்தவர்களிடத்திலிருந்து பணத்தை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் ரூ 2.25 கோடி, திருச்சி மாவட்டத்தில் 94 லட்சம், நாமக்கல்லில் 24.80 லட்சம் என போலி விவசாயிகளிடத்திலிருந்து பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.


இது போல, பல மாவட்டங்களிலிருந்தும் நிதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பிரதமர் விவசாயிகள் நிதி உதவி திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அனைத்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கு வேளாண் துறை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ' பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.


எனவே, இந்தத் திட்டத்துக்கான இணையதள பக்கத்தில் பயன்படுத்தப்படும் கடவுச்சொல்லை உடனடியாக மாற்ற வேண்டும். புதிய கடவுச் சொல் உருவாக்கப்பட்டு அதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இந்த கடவுச்சொல்லை மாவட்டங்களில் உள்ள வேளாண் இணை இயக்குனர்கள் ‘மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


அவர் தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரியான துணை இயக்குனர் ஒருவருக்கு மட்டுமே கடவுச் சொல் விவரத்தை தெரிவிக்க வேண்டும். இந்த கடவுச்சொல்லை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அல்லது துணை இயக்குனர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


அதிகாரம் அளிக்கப்படாத பிற நபர்கள் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமரின் விவசாயிகள் திட்ட முறைகேடு புகார் எதிரொலியாக நான்கு மாவட்டங்களை சேர்ந்த வேளாண் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குனர் ஏ.ஜெ.கென்னடிஜெபக்குமார் நாமக்கல் மாவட்டத்துக்கும் நாமக்கல் துணை இயக்குனர் ஏ.நாச்சிமுத்து விழுப்புரம் மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.


கடலூர் வேளாண் துணை இயக்குனர் எஸ்.வேல்விழி பெரம்பலூர் மாவட்டத்திற்கும், பெரம்பலூர் துணை இயக்குனர் ஜி.பூவலிங்கம் கடலூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்த நான்கு அதிகாரிகளும் பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டப் பொறுப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர். முறைகேடு புகாரைத் தொடர்ந்து வேளாண்மை துறையின் வெறொரு பிரிவுக்கு துணை இயக்குனர்களாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.