துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த எஸ்.ஐ...மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

வழக்கறிஞரிடம் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தூத்துக்குடியைச் மீது எழுந்த புகார் குறித்து காவல்துறை விளக்கமளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


பாளையங்கோட்டை குலவணிகர் புரத்தை சேர்ந்த இசக்கி பாண்டியன் நெல்லை நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் மணப்பாற சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் மீது நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சில காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.


இந்நிலையில் பேச்சிமுத்துக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழங்குவதற்கு வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் முயற்சித்தார். ஆனால் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது இதனால் நெல்லை நீதிமன்றத்தில் பேச்சு முத்துவ சரணடைய செய்ய நேற்று இசக்கி பாண்டியன் ஏற்பாடு செய்தார்.


இதனை அறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, வழக்கறிஞர் இசக்கி பாண்டியனின செல்போனில் பேசி சம்பந்தப்பட்ட குற்றவாளி மீது எங்கள் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளதால் அவரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டார். அதற்கு இசக்கி பாண்டியன் மறுத்ததாக கூறப்படுகிறது.


இதனிடையே சம்பந்தப்பட்ட குற்றவாளி நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அறிந்த எஸ்.ஐ. இசக்கி ராஜா நெல்லை நீதிமன்றம் அருகே சாதாரண உடையில் சிலருடன் காரில் நின்றுகொண்டிருந்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே தனது உதவியாளருடன் பைக்கில் வந்த இசக்கி பாண்டியன் மீது காரை மோத முயற்சித்ததாக கூறப்படுகிறது.


மேலும் எஸ்.ஐ. இசக்கி ராஜா தனது துப்பாக்கியால் இசக்கி பாண்டியனே சுட்டு விடுவதாக மிரட்டி ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.


இதனை கண்டித்து நெல்லை நீதிமன்றத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பாளையங்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு எஸ்ஐ இசக்கி ராஜா மீது வழக்குப்பதிவு செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தினர்.


இதையடுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் இசக்கி பாண்டியன் புகார் செய்தார் இதன்பேரில் எஸ்.ஐ.மகேஷ்குமார் விசாரணை நடத்தி ஆபாசமாக பேசியது கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ. இசக்கி ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர்.


இது குறித்து வெளியான ஊடக செய்திகள் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து எஸ்.ஐ.இசக்கிராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் அளிக்கும்படி சம்பவம் நடந்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உளளது.