நடிகர் சங்கத் தேர்தல் வழக்கை விசாரிக்க விருப்பமில்லை - விலகிக் கொண்ட நீதிபதிகள்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.


அப்போது, நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி தரப்பில், தேர்தலை தள்ளிவைக்க மட்டுமே சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தங்களுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினர்.


மேலும், பதவிக்காலம் முடிந்து விட்டதால் அதன் பின் பொதுக்குழுவில் எடுத்த முடிவுகள் செல்லாது எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல எனவும் வாதிடப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பதிவாளருக்கு மனு அளித்திருக்க வேண்டும் என சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் குறிப்பிட்ட சில உறுப்பினர்களின் புகாரின் அடிப்படையில் தேர்தல் நிறுத்தி வைத்து பதிவாளர் உத்தவிட்டது சட்ட விரோதமானது எனவும் வாதிடப்பட்டது . ஏழுமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், பொதுக்குழுவில் பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை என மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தல் முடிந்த பின்னர் வழக்குகளை தொடர்ந்து நடத்துவது ஏன் என புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தனர். மேலும், தொழில் முறை அல்லாத 60 உறுப்பினர்களை தவிர்த்து, மற்ற வாக்குகளை எண்ணி பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.


கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என இரு தரப்பினருக்கும் அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த சட்டப் போராட்டம் மூலம் இரு தரப்பினரும் என்ன சாதிக்கப் போகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.


அப்போது, விஷால் தரப்பில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ள நிலையில் மறு தேர்தல் நடத்த சாத்தியமில்லை எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


இதையடுத்து, நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்தனர்.


இதையடுத்து, மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து வழக்கில் இருந்து விலகினர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு