ஃபேஸ்புக்கில் அறிமுகமான பிலிப்பைன்ஸ் பெண்மணி.. ஆபத்தாகிப்போன ஆன்லைன் தொடர்பு..!

உங்களது தனிப்பட்ட வீடியோ, புகைப்படங்களை பேஸ்புக்கில் யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அதை வைத்து உங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதற்கு ஒரு கும்பல் இணையதளத்தில் வலம் வருகிறது.


சென்னை காவல்துறையின் சைபர் பிரிவு எச்சரிக்கை வாசகம் தான் இது. ‌சமீபத்திய சம்பவம் ஒன்றே இதற்கு காரணம். குறைவான விலைக்கு ஸ்மார்ட் ஃபோன், மலிவான விலைக்கு ஐ ஃபோன் எனும் போலி விளம்பரங்களை நம்பி பணத்தை ஏமாறுபவர்கள் ஒரு ரகம் என்றால், பார்க்கா‌மல் காதல், தொலைதூரக்‌ காதல், கண்டம் விட்டு கண்டம் காதல்‌‌ என உணர்வு ரீதியாக ஏமாறுபவர்கள் இன்னொரு ரகம்.


பணத்தையும் இழந்து, மன உளைச்சலுக்கும் ஆளா‌ன சென்னை இளைஞர்‌ ஒருவரின் கதைதான் இது. சென்னை தியாகராய நகர் காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவுக்கு சமீபத்தில் ஒரு புகார் வந்தது.


சென்னை ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்‌ இளைஞர் ஒருவர் அளித்த‌ அந்தப் புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பேஸ்புக் ஐடிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் நட்பழைப்பு கொடுத்ததாகவும், அதனை நீண்ட நாட்களாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்து, பின் ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்‌.


பிலிப்பைன்ஸ் பெண்மணியுடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாற, தனது அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவருக்கு அனுப்பியிருக்கிறார் இவர். அனைத்தையும் சேமித்து வைத்துக்கொண்ட அந்தப்பெண், 2 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் பேஸ்புக்கில் உள்ள உன் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டினாராம்.


பயத்தில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் அப்பெண்ணுக்கு அனுப்பிவிட்டு, இதோடு பிரச்னை முடிந்ததென நினைத்திருக்கிறார். மேலும் 5 லட்சம் ரூபாய் கேட்டு மீண்டும் மிரட்டப்பட்டதால் வேறு வழியில்லாமல் தி.நகர் துணை ஆணையர் சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளார்.


புகாரின் ‌உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிந்துகொண்ட சைபர் பிரிவு போலீசார்‌, உடனடியாக பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டு‌, புகார் அளித்த இளைஞருக்கும் அந்தப் பெண்மணிக்கும் உள்ள தொடர்பை துண்டிக்க வைத்துள்ளனர்.


அதோடு,‌ கூகுள் பே மூலம் அனுப்பப்‌பட்ட 2‌ லட்சம் ரூபாய் பணத்தை, அந்தப் பெண்ணுக்குச் சேராமல் நிறுத்தி வைக்க வங்கி அதிகாரிகளிடமும் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


இது போன்ற சைபர் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருவதாகக் கூறும் காவல்துறையினர், தெரியாத நபரிடம் இருந்து பேஸ்புக் அழைப்பு வந்தால் ஏற்றுகொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.


அடையாளம் தெரியாதவர்கள் பேஸ்புக்கில் நண்பர்களாகி, மருத்துவ உதவி கேட்பது போல் பணம் பறிப்பது போன்ற புகார்களும் அதிகம் வருகிறதாம்‌.


அப்படியே மோசடி நபர்களிடம் சிக்கித்தவிக்க நேர்ந்தாலும், தாமதிக்காமல், தயங்காமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று சைபர் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.


அறிமுகம் இல்லாத விஷயங்களைக் கூட ஆணிவேர்‌ வரை ஆராய்ந்து அறிந்துகொள்ள உதவும் அறிவின் ஊற்றான சமூக வலைதளங்களில், அறிமுகம் இல்லாத மனிதர்களின் தொடர்பு பலநேரங்‌ளில் ஆபத்தா‌கவே முடிகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)