தானியங்கி டெபாசிட் இயந்திரம் இருக்கும்போது ஏன் பணம் எடுக்க ATM வரிசையில் நிற்கவேண்டும்..- SBI

இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்குநரான 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' (எஸ்.பி.ஐ) வங்கி, தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம்-களிலிருந்து பணம் எடுப்பதற்கு வரிசையில் நிற்பதற்குப் பதிலாக, எஸ்.பி.ஐ-யின் தானியங்கி டெபாசிட் இயந்திரத்தை (ADWM) பயன்படுத்தி பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. ADWM இயந்திரத்திலிருந்து பணத்தைப் பெறுவதற்கான நடைமுறை ஏடிஎம்-களைப் போன்றதுதான்.


வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், கார்டை இயந்திரத்தில் ஸ்வைப் செய்து தங்கள் பாஸ்வேர்டை செலுத்தி, பின்பு வங்கிக் கணக்கிலிருந்து பணம் பெற்றுக்கொள்ளலாம்.


இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.பி.ஐ "உங்கள் பணத்தை எடுக்க ADWM இயந்திரம் இருக்கும்போது ஏன் ஏ.டி.எம் வரிசையில் நிற்க வேண்டும்? அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி பணத்தை விரைவாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளது. மேலும் அந்த ட்வீட்டில், ADWM இயந்திரம் குறித்து விளக்கும் 22 வினாடி காணொளிப் பதிவையும் எஸ்.பி.ஐ வங்கி பகிர்ந்துள்ளது.


அதில், "நாம் அனைவரும் இந்த இயந்திரத்தை பணத்தை டெபாசிட் செய்ய பயன்படுத்தினோம். ஆனால், இந்த இயந்திரங்களிலிருந்துகூட பணத்தை எடுக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளது.எஸ்.பி.ஐ நாடு முழுவதும் 13,000க்கும் மேற்பட்ட ADWM இயந்திரங்களை நிறுவியுள்ளது. இவை வங்கிக் கிளை அல்லது ஏடிஎம் செல்லாமல் பணத்தையும் எடுக்கவும் செலுத்தவும் உதவுகின்றன.


எனவே, அடுத்த முறை நீங்கள் ஒரு ஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுக்கும்போது வரிசையில் நிற்க வேண்டியிருந்தால் எஸ்.பி.ஐ யின் ADWM இயந்திரத்திலிருந்து பணம் எடுக்க முயற்சி செய்யலாம். எஸ்.பி.ஐ-யின் தானியங்கி டெபாசிட் இயந்திரத்தில் (ADWM) பணத்தைப் பெறுவதற்கான வழிமுறைகள்:


1. உங்கள் டெபிட் கார்டுடன் உங்களுக்கு அருகில் இருக்கும் எஸ்.பி.ஐ-யின் ADWM இயந்திரத்தை அணுகவும்.


2. டெபிட் கார்டை ADWM-ல் நுழைத்து, அதில் வங்கிப் பயன்பாட்டுக்கான ஆப்ஷனை அழுத்தவும்.


3. மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


4. உங்கள் ஏடிஎம் ரகசிய எண்ணை பதியவும்.


5. பணத்தை பெறும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.


6. இப்போது உங்களுக்குத் தேவையான தொகையை பதிந்தால், ADWM-ன் ஷட்டர் திறக்கும், உங்கள் பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். எஸ்.பி.ஐ வங்கி செப்டம்பர் 18 முதல், நாட்டிலுள்ள அனைத்து எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும் ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்டு) மூலம் ஒரு நாளில் 10,000 ரூபாய்க்கு மேல் எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.