தூத்துக்குடி விமானநிலையத்திலிருந்து கொரோனா முழுக் கவச உடையுடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ சென்னைக்கு சென்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நிறைவடைந்தது. இதற்கு பிறகு நாளை முதல் 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.


கொரோனா தொற்று பரவல் காரணமாக கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் சட்டசபையை கூட்டாமல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு சட்டப்பேரவை கூட்டம் நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு உள்ளது.


மேலும் தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தூத்துக்குடியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமான மூலமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.


விமானத்தில் பயணிக்கும்போது கொரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கொரோனா முழு பாதுகாப்பு உடை அணிந்து விமான நிலையத்தில் இருந்து பயணித்தார்.


அவருடன் தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், விளாத்திகுளம் எம்.எல்.ஏ சின்னப்பன் ஆகியோரும் கொரோனா முழு பாதுகாப்பு உடை அணிந்து விமானத்தில் பயணம் செய்தனர்.