தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க கோரி வழக்கு: தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தல், ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளை அரசே ஏற்கக் கோரிய மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அகில இந்திய தனியார் கல்லூரிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கே.எம்.கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனியார் பள்ளி, கல்லூரி., மாணவர்களிடம் வசூலிக்கும் கல்வி கட்டணம், ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கும் நடைமுறை ஆகியவற்றை அரசே ஏற்குமாறு உத்தரவிட வேண்டும்.


மேலும், தனியார் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் மூலம் தணிக்கை செய்து கட்டண விகிதங்களை குறைக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் நேரடியாக கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், ஆன்லைன் மூலம் கட்டணங்களாக வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.