போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம் ...4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு September 17, 2020 • M.Divan Mydeen மதுரை மாவட்டம் பேரையூர் அருகே, போலீசார் விசாரணைக்கு சென்ற மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்பி உத்தரவிட்டுள்ளார். வாழைத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த இதயக்கனி என்பவர் அதே ஊரைச் சேர்ந்த தனது மாமன் மகளை அவரது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் காதல் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இதயக்கனியின் சகோதரர் ரமேஷை நேற்று இரவு விசாரணைக்காக எஸ்ஐ ஜெயகண்ணன் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள பெருமாள் கூட்டம் மலைமீது மரத்தில் தூக்கிட்ட நிலையில் ரமேஷின் உடல் இருந்தது காலையில் தெரியவந்தது. இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த சாப்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, உடலை எடுக்க விடாமல் தடுத்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட எஸ்பி சுஜித்குமார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகே எஸ்பியின் நேரடி பார்வையில் ரமேஷின் உடலை கைரேகை நிபுணர்கள் சோதனையிட்டனர். எஸ்ஐ ஜெயக்கண்ணன் மற்றும் சாப்டூர் காவல் நிலைய போலீஸார் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை இறக்க அனுமதிப்போம் என கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து எஸ்.ஐ. ஜெயக்கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட எஸ்பி சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.