இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சேர 29 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எல்.கே.ஜி வகுப்பில் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கைக்கு rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


செப்டம்பர் 25 வரை மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலுள்ள எட்டாயிரத்து 628 நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1,15,771 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர் என்ற விபரமும் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.


தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை 29,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.மாணவர்கள் விண்ணப்பம் செய்யும்பொழுதே, அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் பள்ளிக்கும், இடையே ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் உள்ள பள்ளிகளில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


பள்ளியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களின் தகுதியான விண்ணப்பங்கள் செப்டம்பர் 30-ம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை இணையதளத்திலும், பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்படும். ஒரு பள்ளியில் உள்ள இடத்திற்கு அதிகமாக மாணவர்கள் விண்ணப்பித்திருந்தால் அவர்களில் காலியாக உள்ள இடத்திற்கு குலுக்கல் முறையில் அக்டோபர் 1-ம் தேதி தேர்வுசெய்யப்படுவார்கள்.


தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் அக்டோபர் 3-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.