சிகிச்சையில் மகன்: கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு- வறுமையிலும் ரூ.2 லட்சத்தை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்

திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ரஜினிமுருகன். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தனது பெயருக்கு முன்னாள் ரஜினியின் பெயரை அடைமொழியாக சேர்த்து கொண்டார். ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.


இவரது மகன் பைக் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது மருத்துவ செலவுக்கு ரஜினிமுருகன் பெரும் தொகையை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை மற்றும் ஊரடங்கு காரணமாக தொழில் முடக்கம் ஆகியவற்றால் தற்போது ரஜினி முருகன் மிகவும் வறுமையில் வாடி வருகிறார்.


இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் பணி நிமித்தமாக அவசரமாக சென்றபோது அவர் வைத்திருந்த பார்சல் ஒன்றை கீழே தவறவிட்டுவிட்டார். அதனை பிரித்து பார்த்ததில் 2 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்தது.


இதனை கண்ட ரஜினி முருகன் தனது மனைவி கோகிலாவை அழைத்து கொண்டுஅந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். இதுகுறித்து அறிந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் வறுமையில் வாடினாலும் நேர்மையாக செயல்பட்ட ரஜினி முருகன் மற்றும் அவரது மனைவியை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தார்.