இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது !

கோவையில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


26வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக கோவையில் தனது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.


அந்தப் பெண் வேலைக்கு செல்வதால், தனது பெண் குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டின் அருகில் வசிக்கும் பெண் ஒருவரை ரூ.3000 பணிக்கு அமர்த்தியுள்ளார்.


இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி, தனது குழந்தையை பார்த்துக் கொள்ளும் தேவி வெளியூர் சென்றதால், தேவியின் வீட்டில் குழந்தையை விட்டு விட்டு பணிக்கு சென்றவர் மீண்டும் வந்து குழந்தையை வாங்கும் போது குழந்தையின் உடலில் காயங்கள் இருந்த நிலையில், கண்கள் வீங்கி உடல்நலமும் பாதிக்கப்பட்டதால் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தார்.


அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இத்தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குழந்தையை பார்த்துக்கொள்ள விட்டு வந்த வீட்டில் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணான தேவி என்பவரின் கணவர் மற்றும் அவரது மகள் வீட்டிலிருந்ததை உறுதி செய்தனர்.


அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தேவியின் கணவரான ராமுவின் நண்பர் சக்திவேல் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.


ராமு வீட்டிற்கு அடிக்கடி சக்திவேல் வந்து செல்வதும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, சக்திவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்