தமிழகத்தில் எதற்கெல்லாம் அனுமதி!!


தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் ஆகியவை 100 சதவீத பணியாளர்களுடன் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


மேலும், பார்சல் சேவை இரவு 9 மணி வரை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தில், தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் வரும் 21ம் தேதி முதல் இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்கள் வரும் 1ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என்றும், அலுவலகங்களில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை தொடர்பு அலுவலராக நியமித்து, நோய்த் தொற்று உள்ளவர்கள் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்கவும், அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்வதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வங்கிகள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவை 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து மலை வாழிடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகள் 75 நபர்களுக்கு மிகாமல் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும் என்றும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில் சேவை குறித்து வரும் 15ம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.