வெளிமாநிலத்தவர்களுக்கு உடனடி இ -பாஸ்: முதல்வர் அறிவிப்பு

தொழிற்சாலைகளில் பணி புரிய வருகைத்தரும் வெளி மாநிலத்தவர்களுக்கு உடனடியாக இ- பாஸ் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


தமிழகத்தின் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது “இந்தியாவில் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனாத் தடுப்பு பணிகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.


கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் முன்னெடுத்த மாநிலம் தமிழகம். இந்தப் பொதுமுடக்க காலத்தில் இந்தியாவிலேயே அதிக அளவு முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இதன் மூலம் அதிக அளவு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


இ - பாஸ் பொருத்தவரை முறையாக இ - பாஸ் கேட்போருக்கு விரைவாக இ- பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணி புரிய வருகைத்தரும் வெளி மாநிலத்தவர்களுக்கு விரைவாக இ- பாஸ் வழங்கப்படும்” என்றார்.