ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை. ஆலை மூடலை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரிதான் திறக்க உத்தரவிட முடியாது என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிரந்தரமாக ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு பலதரப்பட்ட நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.


கடந்த 2018 மே 22-ல் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீர், காற்று மாசு ஏற்படுத்துவதாகக் கூறி, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு, 2018 மே 28 ம்தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.


இதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2019 ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். 2019 ஜூன் 27 முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது.


39 நாட்கள் விசாரணைக்கு பின், 2020 ஜனவரி 8 ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கினர். 815 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுப்படி செய்திருப்பதாகவும், ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது செல்லும் என குறிப்பிட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு