இந்தி தெரியவில்லையா.. வெளியேறுங்கள்!' ஆயுஷ் பயிற்சி வகுப்பில் தமிழக மருத்துவர்களுக்கு நடந்தது என்ன

தமிழக மருத்துவர்களை, ``இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்" என்று கூறி அவமதித்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்தி திணிப்பை எதிர்த்தும் ஆதரித்தும் இந்தியா முழுவதும் பல்வேறு பிரச்னைகளும் பிரசாரங்களும் தினந்தினம் முளைத்த வண்ணம் உள்ளன.


இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்குக் கடந்த மூன்று நாள்களாக விர்ச்சுவல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதில் இந்தியா முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகள் முழுவதும் இந்தியிலேயே உரையாற்றியதால், ``எங்களுக்கு இந்தி புரியவில்லை. ஆங்கிலத்தில் உரையாற்றுங்கள்" என்று கூறிய தமிழக மருத்துவர்களை, ``இந்தி தெரியவில்லை என்றால் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்" என்று கூறி அவமதித்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.


ஆயுஷின் விர்ச்சுவல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர்கள் சிலருடன் இந்தச் சம்பவம் குறித்துப் பேசினோம். ``மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இந்த விர்ச்சுவல் பயிற்சி வகுப்பில் இந்தியா முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 400 பேர் கலந்துகொண்டோம். இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தாம். அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் பொது மொழியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது.


ஆனால், இந்த வகுப்புகளில் பேசிய அதிகாரிகள் பலரும் இந்தியில்தான் பேசினார்கள். எங்களுள் பெரும்பாலானோருக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஒருவர் ஆயுஷ் அமைச்சகச் செயலர் ராஜேஷ் கொடேச்சா இந்தியில் பேசியபோது ``ஆங்கிலத்தில் பேசுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ராஜேஷ் கொடேச்சா, ``எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் இந்தியில் பேசுகிறேன். இந்தி தெரியாதவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பைவிட்டு வெளியேறுங்கள்" என்று கூறினார். இதேபோல் இதற்கு முந்தைய நாள் வகுப்பொன்றில் பேசிய ஆயுஷ் அதிகாரி ஒருவர் இயற்கை மருத்துவத்தைத் தவிர்த்துவிட்டு யோகாவைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்.


அப்போது தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஒருவர் ``யோகாவும் இயற்கை மருத்துவமும் ஒரு சிஸ்டத்துக்குள்தானே வருகின்றன. நீங்கள் ஏன் அதைப் பிரித்துச் சொல்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அந்த மருத்துவரை உடனடியாகப் பயிற்சி வகுப்பைவிட்டு வெளியேறச் சொல்லி அந்த அதிகாரி மிரட்டல் விடுத்தார். ``இந்தி தெரியாத மருத்துவர்கள் இந்தப் பயிற்சி வகுப்புக்குத் தேவையில்லை" என்ற தொனியிலேயே இருந்தது ஆயுஷ் அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் செயல்கள் அனைத்தும்.


இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் எங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகிறோம். தமிழக அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்ல உள்ளோம். ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேத மருத்துவத்துக்குத் தரும் முக்கியத்துவத்தை இயற்கை, சித்த மருத்துவத்துக்குத் தருவதில்லை" என்று ஆதங்கத்துடன் முடித்தனர் நம்மிடம் பேசிய இயற்கை மருத்துவர்கள்.


AYUSH அமைச்சகத்தில் உள்ள ஒவ்வோர் ஆங்கில எழுத்தும் ஒவ்வொரு மருத்துவத்துறையைக் குறிக்கும். இதில் S எனும் எழுத்து சித்த மருத்துவத்தைக் குறிப்பிடுவதாகும். மத்திய அரசு சித்த மருத்துவத் துறைக்குக் குறைந்த நிதி ஒதுக்கியதால், ஆயுஷ் (AYUSH) அமைச்சகத்தின் பெயரிலிருந்து சித்த மருத்துவத்தைக் குறிப்பிடும் S எனும் எழுத்தை நீக்கி விடலாமா எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அண்மையில் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மொழியைக் காரணமாக வைத்து இயற்கை மருத்துவர்களுக்கு நடந்த ஆயுஷின் இந்த அவமதிப்புச் செயல் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு