அதிமுக முன்னாள் எம்.பி. இன்று திமுகவில் இணைகிறார்

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி.யான ஆர். லட்சுமணன் திமுகவில் இணைய இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகத்தை கடந்த 2012-ல் அமைச்சர் பதவியில் இருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா நீக்கினார்.


அப்போது சி.வி.சண்முகத்திடம் இருந்த விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியில் லட்சுமணனை ஜெயலலிதா நியமித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லட்சுமணன் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் இணைப்புக்குப் பிறகு சி.வி.சண்முகம் மாவட்டச் செயலாளராகவும், லட்சுமணன் அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.


அதன்பிறகு மாவட்ட அளவில் ஓரங்கப்பட்ட லட்சுமணன், கடலூரைப் போல விழுப்புரம் மாவட்டத்தையும் பிரித்து தன்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு சி.வி.சண்முகம் ஒப்புக் கொள்ளாததால் அதிருப்தி அடைந்த லட்சுமணன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைய இருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.