இரிடியம் பொருத்தப்பட்ட விமான உதிரி பாகம் வாங்கி தருவதாகக் கூறி ரூ.6 கோடி மோசடி

விமான உதிரி பாகத்தில் இரிடியம் இருப்பதாக கூறி கரூரை சேர்ந்த நபரிடம் 6 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த கும்பலில் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.


ராமநாதபுரத்தை சேர்ந்த முனியசாமி என்பவர், கரூரை சேர்ந்த மதன்குமாரிடம் லண்டனை சேர்ந்த விமான உதிரி பாக உற்பத்தி நிறுவனத்தில் தென் பிராந்திய மேலாளராக பணிபுரிவதாக கூறி அறிமுகமாகியுள்ளார்.


விமானங்களை கதிர்வீச்சிலிருந்து காப்பதற்காக உதிரிபாகங்களில் இரிடியம் பொருத்தப்படுவதாகவும், 12 கோடி மதிப்புள்ள இரிடியத்தை 6 கோடிக்கு வாங்கி தருவதாகவும் முனியசாமி கூறியதை நம்பி, மதன்குமாரும் கடந்த 2015ல் இரு தவணைகளாக 6 கோடி ரூபாயை கொடுத்துள்ளார்.


பணத்தை பெற்றுக் கொண்ட கும்பல் இரிடியத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால், ராமநாதபுரம் வந்து பணத்தை திரும்ப கேட்டவரை காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.


இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்பியிடம் புகாரளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சுகுமாறன் என்பவரை கைது செய்ததோடு, மீதமுள்ள முனியசாமி உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர்.