ஐதராபாத்திற்கு இடமாறிய அம்மோனியம் நைட்ரேட்.. 43 டன் எங்கே..

சென்னை - மணலியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் எடுத்த ஐதராபாத் நிறுவனம், முதற் கட்டமாக 10 ட்ரக்குகள் மூலம் 181 டன்னை பத்திரமாக இடம் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


697 டன் மட்டுமே ஏலம் விடப் பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளதால், எஞ்சிய 43 டன் அம்மோனியம் நைட்ரேட் எங்கே? என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் நிகழ்ந்த அம்மோனியம் நைட்ரேட் வெடி விபத்து உலக நாடுகளை உலுக்கியது.


இந்நிலையில், சென்னை - மணலியில் 740 டன் அளவுக்கு சுங்கத் துறை கட்டுப்பாட்டில் அம்மோனியம் நைட்ரேட் இருக்கும் தகவல் வெளியானது. நகரின் மையப்பகுதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் 5 ஆண்டுகளாக அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சுற்றி சுமார் 12 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளதால், பத்திரமாக அப்புறப்படுத்த பல்வேறு தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.


இதனை ஏற்று, ஐதராபாத் - திரிமுல்கேரியில் இயங்கி வரும் சால்வோ வெடிப்பொருள் மற்றும் கெமிக் கல்ஸ் நிறுவனத்திடம் ஏலம் மூலம் அம்மோனியம் நைட்ரேட் ஒப்படைக்கப்பட்டது.


முதற்கட்டமாக 181 டன் அம்மோனியம் நைட்ரேட்டை 10 டிரக்குகள் மூலம் 10 கண்டெய்னர்களில் இடம் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ள ஐதராபாத் நிறுவனம், இரண்டொரு நாட்களில் முழுமையாக அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளது.


இது ஒரு புறமிருக்க, கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சுங்கத்துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் இருப்பதை அதிகாரப் பூர்வமாக ஒப்புக்கொண்டிருந்தது.


ஆனால், சுங்கத்துறை வெளியிட்ட ஏல அறிவிப்பில் 697 டன் அம்மோனியம் நைட்ரேட் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளது. எனவே, மீதமுள்ள 43 டன் மாயமானது தொடர்பாக கேட்டதற்கு சுங்கத்துறை தரப்பிலிருந்து அதிகாரிகள் , உரிய விளக்கம் அளிக்கவில்லை.


2015 - ல் சென்னையில் நிகழ்ந்த வெள்ளத்தின் போது 43 டன் அம்மோனியம் நைட்ரேட் அடித்துச் செல்லப்பட்டதாக சுங்கத்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருந்தன.


ஆனால், இதனை அதிகாரப் பூர்வமாக சுங்கத்துறை வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் எஞ்சிய 43 டன் அம்மோனியம் நைட்ரேட் எங்கே? என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே உள்ளது. இந்த விவகாரத்தில் துவக்கம் முதல் பல்வேறு முரண்பாடான தகவல்களை வெளியிட்டு வரும் சென்னை சுங்கத்துறை உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்