வீட்டுக்குள் குப்பையோடு ரூ. 2 லட்சம், 4 குடம் காசு - பணம் இருந்து மூதாட்டிகள் பட்டினி கிடந்த பரிதாபம்சென்னையில் ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டில் இரண்டு டன் குப்பைகளுடன் இரண்டு லட்சம் அளவுக்கு ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லா நோட்டுக்கள், நான்கு குடம் சில்லறை காசுகளைக் கண்டெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை, ஓட்டேரி சத்தியவாணி முத்துநகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டு எண் 34 எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த வீட்டுக்குள்ளிருந்து அடிக்கடி பாம்புகள் வந்து போகும். எப்போது துர்நாற்றம் வீசும்.


ஆனால், இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களான ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, மகேஸ்வரி ஆகிய மூன்று பேரும் எப்போதும் பிளாட்பாரத்தில் தான் தங்கியிருப்பர்.


இந்த நிலையில் கடந்த மாதம் மகேஸ்வரி பிளாட்பாரத்திலேயே உயிரிழந்துவிட்டார். கொரோனா பயத்தால் மகேஸ்வரியின் சடலத்தை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை, ராஜேஸ்வரி மகேஸ்வரியின் சடலத்தோடு பிளாட்பாரத்தில் அழுந்துகொண்டிருந்ததை தலைமைச் செயலக காலணி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கவனித்தார். மகேஸ்வரியின் உடலை அடக்கம் செய்யவும் உதவி செய்தார்.


அதன்பிறகு சில நாள்கள் கழித்து ரோந்து வந்த போது ராஜேஸ்வரியும் விஜயலட்சுமியின் பிளாட்பாரத்தில் தங்கியிருந்ததைக் கவனித்தவர், விசாரித்தார். மூதாட்டிகள், “எங்கள் வீட்டில் நாங்கள் குப்பைகளை சேகரித்து வைத்துள்ளோம்.


வீட்டைத் திறக்க முடியவில்லை. அங்கு தங்க முடியாததால் பிளாட்பாரத்தில் தங்கியுள்ளோம்” என்று பதில் சொல்லியுள்ளனர். மூதாட்டி கூறியதைக் கேட்ட ஆய்வாளர் ராஜேஸ்வரி காவலர்களுடன் சென்று வீட்டைப் பார்த்தார். வீட்டுக்கு முன் சென்றபோதே துர்நாற்றம் வீசியது.


காவலர்கள் வீட்டின் பூட்டை உடைத்துத் திறந்தனர். உள்ளே செல்ல முடியாதபடி நாற்றம் எடுத்தது. அத்துடன் பாம்பு, பல்லி, பூரான், தவளை, எலிகளும் அங்கு நிறைந்திருந்தன.


மாநகராட்சி ஊழியர்கள் வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றத் தொடங்கினர். அப்போது ஒரு மூட்டையிலிருந்து சில்லறை காசுகளும் பணங்களும் சிதறி விழுந்தன. அதற்கு மூதாட்டிகள், “நாங்கள் குப்பை பொறுக்கி சேகரித்த பணம், காசு, நகைகளை இங்குதான் வைத்துள்ளோம்” என்று கூறினர். 


அதன் பிறகு கவனமாக ஊழியர்கள் குப்பைகளை அகற்றத் தொடங்கினர். குப்பைகளோடு குப்பைகளாக சிறு சுறு துணி மூட்டைகளாக பணம் கிடைத்தது. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளும் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளும் அவர்களுக்குக் கிடைத்தன.


இது மட்டுமல்லாமல் நான்கு குடங்கள் நிரம்பும் அளவுக்கு சில்லறைக் காசுகளும் அந்த வீட்டிலிருந்து கண்டெடுத்தனர். வீட்டில் கிடைத்த ரூபாய் நோட்டுகளை எண்ணிப்பார்த்தபோது இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்துள்ளது. சுமார் ஏழு சவரன் தங்க நகைகளும் கிடைத்துள்ளன.


இரண்டு நாள்களாக மாநகராட்சி ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டத்தில் இரண்டு டன் குப்பை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. தற்போது வீடு முழுவதையும் சுத்தம் செய்து வண்ணம் அடித்து வருகிறார்கள்.


இதுகுறித்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, “வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில் வசிக்கிறார்கள் என்று நினைத்தேன். விசாரித்தபோது தான் அவர்களைப் பற்றி தெரியவந்தது. முதுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இப்போது இவர்களை இவர்களின் வீட்டிலேயே தங்க வைத்துள்ளோம்” என்று கூறினார். முதியவர்களின் வீட்டை சுத்தம் செய்துகொடுத்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)