மாவு அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய சேலை : பெண்ணுக்கு சட்டென நிகழ்ந்த துயரம்


சேலத்தில் மாவு அரைக்கும் இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பரிதாபமாக பெண் ஒருவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள பாகல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்.


இவருக்கு கலைமணி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். வீட்டின் அருகே இவர்களுக்கு சொந்தமாக மாவு அரவை செய்யும் மில் மற்றும் எண்ணெய் மில் உள்ளது.


இந்த மில்லில் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாவு அரைக்கவும், எண்ணெய் ஆட்டவும் பயன்படுத்தி வந்தனர். 


இந்த மில்லில் அவரது சண்முகத்தின் மகன் சிவக்குமார் பணியாற்றி வந்தார். பகுதி நேரமாக சண்முகத்தின் மனைவி கலைமணியும் மாவு அரைக்கும் இயந்திரத்தில் பணியாற்றுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அந்த வகையில் கலைமணி ராகியை மாவாக அரைப்பதற்காக இயந்திரத்தில் கொட்டிவிட்டு மோட்டரை இயக்கியுள்ளார்.


அந்த மோட்டரின் பெரிய அளவிலான பெல்ட் தரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருக்கும். பெல்ட் இயங்கும்போது கலைமணி அந்த பெல்ட்டை தண்டிச் சென்றுள்ளார். image அப்போது கலைமணியின் சேலை பெல்ட்டில் சிக்கிக்கொள்ள, சட்டென கலைமணி சுழற்றி அடித்து தூக்கிவீசப்பட்டார்.


இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மோட்டரை நிறுத்தினர். பின்னர் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்த கலைமணியின் உடலை மீட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.