கொரோனாவால் வெற்றி.. ஒரு வழியாக அரியர் கஜினி முகமதுகள் பாஸ்..! இனி விஐபி அந்தஸ்த்து

தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கணக்கில் அரியர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்ச்சி அடைய இயலாமல் தவித்த லட்சகணக்கான பொறியியல் மாணவர்கள் இந்த முறை தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைந்துள்ளனர்.


கலை அறிவியல் கல்லூரி மாணவர்களைவிட, ஜாக்பாட் அடித்த பொறியாளர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் நண்பர்களால் கேலிக்குள்ளாவது சினிமாவிலும் நிஜத்திலும் சகஜமான ஒன்று. தமிழகத்தில் பொறியியல் படிக்கின்ற 60 சதவீத மாணவர்கள் கர்ணனின் கவச குண்டலங்கள் போல 10க்கும் மேற்பட்ட அரியர்களை வைத்துக் கொண்டு வலம் வருவது வாடிக்கையான நிகழ்வாகும்.


அரியர் வைத்திருக்கும் பாடங்களில் வெற்றி பெற கஜினி முகமது போல ஒவ்வொரு பருவ தேர்விலும் போராடி வந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரசின் ஒற்றை அறிவிப்பு ஜாக்பாட்டாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர் கல்வியாளர்கள்.


4 ஆண்டுகளில் 8 பருவத்தேர்வுகளை எதிர்கொள்ளும் நம்ம ஊரு பொறியியல் மாணவர்கள் ஒரு பருவத் தேர்வுக்கு 9 பாடங்கள் வீதம் மொத்தம் 68 பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும்.


இதில் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று பொறியியல் படிப்பை முடித்து வேலைக்குச் செல்கின்றனர். 10 சதவீத மாணவர்கள் ஒன்றிரண்டு பாடங்களில் அரியர் வைத்து அடுத்த பருவத்தேர்வுக்காக காத்திருக்கின்றனர்.


பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் 10 முதல் 35க்கும் மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் அரியருடன் தவித்து வந்த மாணவர்கள் தான் ஏராளம்..! மேலும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு எழுதினாலும், எழுதாவிட்டாலும் அரியர் வைத்திருக்கும் பாடத்திற்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம் என்ற விதி இருப்பதால், 6 மாதத்திற்கு ஒருமுறை வழக்கம் போல எல்லா அரியர் பாடங்களுக்கும் சேர்த்து முன் கூட்டியே மாணவர்கள் கட்டணம் செலுத்துவது வழக்கம்.


இந்த நிலையில் தான், தேர்வு எழுத குறிப்பிட்ட பாடத்துக்கு கட்டணம் செலுத்தி இருந்தாலே பாஸ் என்று தமிழக உயர்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டு பொறியியல் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.


அதாவது 30 பாடங்கள் அரியர் வைத்திருந்தாலும் தேர்வுக் கட்டணம் செலுத்தி இருந்தால் அவர் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் அரியருடன் போராடிவந்த சுமார் 4 லட்சம் மாணவர்கள், "ஒரு வார்த்தை ஒகோன்னு வாழ்க்கை" என்று கொரோனா புண்ணியத்தால், எளிதாக தேர்ச்சி அடைந்துள்ளனர் என்கின்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.


தற்போது, இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதும் நிலையில் உள்ளனர். மொத்தமாக இந்த ஆண்டு 7 லட்சம் பொறியியல் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் பாடங்களை விரும்பும் நேரத்தில் எழுதிக் கொள்ளலாம் என்ற சாய்ஸ் இருந்ததால், அரியர் பாடத்திற்கு பணம் கட்டாத பலருக்கும் இந்த அதிர்ஷ்டம் அடிக்கவில்லை.


எனவே, தற்போதைய அறிவிப்பின்படி, அவர்களில் பலர் 5 பாடம் மட்டுமே தேர்வாகும் யோகம் உள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றனர் கல்வியாளர்கள். ஒட்டுமொத்தமாக தேர்வே எழுதாமல், ஏராளமானோர், இந்த ஆண்டு பொறியியல் பட்டம் பெறுவதால் சமூகத்தில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.


அதேநேரத்தில் இனி உறவினர் வீட்டுக்கு சென்றால் என்ன வேலை பார்க்கறீங்கன்னு கேட்டு கடுப்பேத்தவே வீட்டுக்கு ஒரு நலன் விரும்பி காத்திருப்பார் விஐபிகளே உஷார்..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)