ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு முடியும் வரை முதல்வர் பழனிசாமி கையில் உள்துறை இருக்கக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை சுதந்திரமாக நடைபெற வேண்டுமானால் முதல்வர் வசமிருந்து உள்துறை மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


சாத்தான் குளத்தில் கூடுதல் நேரத்தில் கடையைத் திறந்து வைத்ததாக எழுந்த பிரச்சினையில் ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.


இந்நிலையில் ஜூன் 20-ம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் கோவில்பட்டி கிளைச் சிறையில் ஜெயராஜும் பென்னிக்ஸும் அடைக்கப்பட்டனர். அங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 22-ம் தேதி இரவு 9 மணிக்கு பென்னிக்ஸும், மறுநாள் அதிகாலையில் ஜெயராஜும் மரணமடைந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையிலெடுத்தது.


விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் முதல்வரிடம் உள்துறை அமைச்சகம் இருக்கக்கூடாது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு முடியும் வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையில் உள்துறை இருக்கக் கூடாது.


இந்த வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “வழக்குத் தொடர்பான எந்த ஒரு விசாரணையும் நடக்கும் முன்னரே, தந்தை-மகன் உடல்நலக் கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என முன்னுக்குப் பின் முரணாக, பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


இதைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் செயலாகத்தான் கருத வேண்டும். மேலும், இந்தச் செயல் அவர் வகித்து வரும் முதல்வர் பதவிக்கு அழகல்ல. எனவே, கொலை விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும். மேலும் தற்போது விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அமைப்பான சிபிசிஐடி, முதல்வர் கையில் உள்ள உள்துறையின்கீழ் வருகின்றது. எனவே, அந்த இலாகாவை முதல்வர் பழனிசாமி வைத்திருந்தால் இந்த இரட்டைக் கொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது. எனவே, இந்த வழக்கு முடியும் வரை உள்துறை இலாகா பொறுப்பை முதல்வர் பழனிசாமி வைத்திருக்கக்கூடாது.


மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு விசாரணை திசை மாறாமல் இருக்க, உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற வேண்டும். எனவே, இது தொடர்பாக தகுந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்“ என தனது மனுவில் வழக்கறிஞர் ராஜராஜன் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.