கந்தசஷ்டி கவசம் குறித்து ‘யூ-டியூப்’ சேனலில் அவதூறாக விமர்சித்த விவகாரம் தொடர்பாக அரியாங்குப்பத்தில் தி.க. அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கார் கண்ணாடி நொறுக்கப்பட்டது.

கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து, கருப்பர் கூட்டம் என்ற ‘யூ- டியூப்’ சேனலில் அவதூறாக வீடியோ பதிவு ஒன்று வெளியானது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கருப்பர் கூட்டம் ‘யூ டியூப்’ சேனலை சேர்ந்த சென்னை வேளச்சேரி செந்தில்வாசன் (வயது 49) கைது செய்யப்பட்டார்.


மற்றொருவரான ராயபேட்டையை சேர்ந்த சுரேந்திரன் (36) புதுவை அரியாங்குப்பம் கோட்டைமேட்டில் தஞ்சமடைந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த பா.ஜ.க.வினர் கோட்டைமேடு தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தை முற்றுகையிட்டனர்.


அங்கிருந்தவர்களிடம், சுரேந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்தது ஏன்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். அத்துடன் அங்குள்ள அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை அழிக்க முற்பட்டனர். இதையடுத்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.


அப்போது பா.ஜ.க. மாநில இளைஞரணி நிர்வாகி கார்த்திகேயனின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுபற்றி தெரியவந்ததும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தைச் சேர்ந்த மேலும் பலர் அங்கு வந்தனர். இதனால் மேலும் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.


இதை அறிந்த அரியாங்குப்பம் போலீசார் அங்கு விரைந்து வந்து, இரு தரப்பினரையும் கலைந்துபோக செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து காலாந்தோட்டம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவி, பா.ஜ.க. பிரமுகரான கார்த்திகேயன் ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்தவர்கள் மீதும் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)