அன்று யாசகர்... இன்று தேநீர் விற்பனையாளர் : ஆதரவற்றோருக்கு உதவும் இளைஞர்!


தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்டவர் தமிழரசன். பிஎஸ்ஸி பட்டதாரியான இவர், தனது இரண்டு வயதில் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளார். தந்தையின் நண்பர் ஒருவர் உதவிசெய்ய விருதுநகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்து படித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்த இவர், வேலை தேடி சென்னை வந்துள்ளார்.


ஆனால் வேலை ஏதும் கிடைக்க வில்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சாலையோரங்களில் தங்கியுள்ளார். அப்படி ஒரு நாள் இரவு தூங்கிக்கொண்டிருந்த போது அவருடைய உடைமைகள் மற்றும் கல்விச் சான்றிதழ்களை மர்ம நபர்கள் சிலர் எடுத்துச் சென்று விட்டனர்.


இதனால் திக்கற்று நின்ற தமிழரசன் வேறு வழியில்லாமல் யாசகம் பெற தொடங்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக மேலாக யாசகம் பெற்று வாழ்வை ஓட்டி வந்த தமிழரசன், கிடைக்கும் பணத்தில் தான் உணவருந்துவது மட்டுமல்லாமல், தன்னைப் போல பசியால் வாடுபவர்களுக்கும் உணவு அளித்து உதவி செய்து வந்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், சொந்த ஊரை நோக்கி புறப்பட்ட தமிழரசனால், மதுரையைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.


இதனையடுத்து அலங்கா நல்லூர் பகுதிக்கு வந்த தமிழரசன், சென்னையில் யாசகம் பெற்று சேமித்து வந்த 8 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாடகை வீடு, மிதிவண்டி, தேநீர் பாத்திரம் உள்ளிட்டவற்றை வாங்கி அதன் மூலம் அப்பகுதியில் தேநீர் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.


விற்பனை600 முதல் 1000 ரூபாய் வரை வருமானம் கிடைக்க, தன்னுடைய செலவு போக மீதமுள்ளப் பணத்தில் உணவுப் பொருட்களை வாங்கி, சமைத்து அதனை பொட்டலங்களாக மடித்து பசியால் வாடும் மக்களுக்கு வழங்கி வருகிறார்.


இது குறித்து தமிழரசன் கூறும் போது “ தேநீர் விற்பனை செய்யும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்களை தயார் செய்கிறேன். உணவு கிடைக்காமல் தான் பெற்ற கஷ்டத்தை நம் கண் முன் இருக்கும் ஆதரவற்றோர் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே இதுபோன்ற உதவிகளைச் செய்கிறேன்.


இந்தச் சேவை மனதிற்கு ஆறுதலையும் நிம்மதியையும் தருகிறது. தொழிலை மேம்படுத்த வங்கியில் சென்று கடன் கேட்டேன். ஆனால் அவர்கள் கடன் தர மறுத்து விட்டார்கள். வரும் காலத்தில் ஆதரவற்றோருக்கு இல்லம் அமைத்து, அவர்களை பாதுகாப்பதே எனது லட்சியம்.”எனத் தெரிவித்துள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு