பத்து ஆண்டுகள் கழித்து பிசிஜி தடுப்பு மருந்து தயாரிக்கும் கிண்டி அரசு ஆய்வகம்..

பத்து ஆண்டுகள் கழித்து கிண்டியில் உள்ள மத்திய அரசு கீழ் இயங்கும் பி சி ஜி தடுப்பு மருந்து ஆய்வகம் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளயுள்ளது. காசநோய் வராமல் தடுப்பதற்காக பிசிஜி தடுப்பு மருந்து பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.


இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 700 லட்சம் டோஸ் பிசிஜி தடுப்பு மருந்து தேவைப்படும். இதில் 50% மேலான தேவையை கிண்டி ஆய்வகம் பூர்த்தி செய்து வந்தது. ஆனால் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆய்வக கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்ற காரணத்தால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.


தற்போது உரிய அனுமதி பெற்று மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளது. இன்று 4.2 லட்சம் டோஸ் பி சி ஜி தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 170 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து தயாரிக்கப்படவுள்ளது.


இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு தேவைப்படும் 700 லட்சம் டோஸ் பி சி ஜி தடுப்பு மருந்தில் அடுத்த ஆண்டு முதல் 400 லட்சம் டோஸ் பி சி ஜி தடுப்பு மருந்து தயாரிக்கப்படவுள்ளது.உற்பத்தி நிறுத்தப்பட்ட கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை மற்றும் புனேவில் உள்ள தனியார் நிறுவனங்களே பிசிஜி தடுப்பு மருந்து உற்பத்தி செய்து வந்தது. தற்போது மீண்டும் அரசு உற்பத்தி தொடங்கியுள்ளதால் பி சி ஜி தடுப்பு மருந்தின் விலை குறைந்து இந்தியா சுயசார்பாக இருக்க வழி செய்யும். கிண்டியில் உள்ள பி சி ஜி ஆய்வகம் 1948 ல் தொடங்கப்பட்டது.