தமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்க உத்தரவு

தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி சரகங்களிலும், மதுரை, விழுப்புரம் மாவட்டங்களிலும் போலீஸ் நண்பர் குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் போலீஸ் நண்பர் குழுவுக்கும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிக்க உள்ளனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போலீஸ் நண்பர் குழுவினரின் அத்துமீறல்கள் பற்றிப் புகார்கள் வந்தன.


இந்நிலையில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் போலீஸ் நண்பர் குழுவுக்குத் தற்காலிகத் தடை விதிப்பதாகத் திருச்சி சரகக் காவல்துறைத் துணைத்தலைவர் ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.


இதேபோல் விழுப்புரம் மாவட்டக் காவல்நிலையங்களில் இனி போலீஸ் நண்பர் குழுவினர் வருவதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன் தடை விதித்துள்ளார். அந்தப் பணிக்கு இனி ஊர்காவல் படையினர், முன்னாள் படை வீரர்கள் ஆகியோரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.


இதை மீறி போலீஸ் நண்பர் குழுவினரைக் காவல்நிலையத்துக்குள் அனுமதித்தால் காவல்நிலைய ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


இதேபோல் மதுரை மாவட்டத்திலும் போலீஸ் நண்பர் குழுவுக்குத் தடை விதித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் போலீஸ் நண்பர்கள் குழுவுக்குத் தடை விதிப்பதாகத் திருநெல்வேலி சரகக் காவல்துறைத் துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு அறிவித்துள்ளார். சாத்தான்குளம் இரட்டைக் கொலை உட்படப் பல்வேறு நிகழ்வுகளில் போலீஸ் நண்பர் குழுக்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.


இந்நிலையில் தமிழகம் முழுவதும் போலீஸ் நண்பர் குழுவைப் பயன்படுத்தத் தற்காலிகத் தடை விதிப்பதாக, அனைத்து மண்டலக் காவல்துறைத் தலைவர்களுக்கும் தமிழகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதையடுத்துப் போலீஸ் நண்பர் குழுவைப் பயன்படுத்த அந்தந்தச் சரகக் காவல்துறைத் துணைத்தலைவர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தடை விதித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு