மேலப்பாளையத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது

நெல்லை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் சந்தை சாலையில் நேற்று ஆடுகள் விற்பனை களைகட்டியது. கயத்தாறு பகுதியில் இருந்து மினி வேன்களில் வந்திறங்கிய ஆடுகள் உடனுக்குடன் விற்பனையாகின. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.


இப்பண்டிகையின் நோக்கமே வறுமையில் வாடும் ஏழைகளுக்கு இறைச்சியை தானமாக வழங்க வேண்டும் என்பதாகும். எனவே இஸ்லாமியர்கள் குர்பானி கொடுப்பதற்காக ஆடுகள், மாடுகள், ஒட்டகம் ஆகியவற்றை பலியிட்டு ஏழைகளுக்கு வழங்குவது வழக்கம். பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை நடப்பது வழக்கம். தென்மாவட்டங்களில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டு சந்தை, நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தை ஆகியவற்றில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும்.


இச்சந்தைகளுக்கு விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்களில் இருந்து கூட வியாபாரிகள் வருவர். இவ்வாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்டு சந்தைகள் அனைத்தும் மாதக்கணக்கில் மூடிக் கிடக்கின்றன. நெல்லை, தூத்துக்குடியின் ஆடு, மாடு விற்பனையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையான மேலப்பாளையம் சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் தற்போது கோழி விற்பனை மட்டுமே பெயரளவுக்கு நடந்து வருகிறது.


இந்நிலையில் பக்ரீத் வருவதை ஒட்டி நேற்று 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மேலப்பாளையம் சந்தைக்கு வெளியில் உள்ள சாலையில் திரண்டனர். ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள சுமார் 300 ஆடுகளை சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்தனர். பக்ரீத் பண்டிகைக்கு ஆடுகளை வாங்க காத்திருந்த மேலப்பாளையம் பகுதி மக்களும் விரைந்து சென்று ஆடுகளை தேவைக்கேற்றபடி வாங்கிச் சென்றனர்.


வெள்ளாடுகளை விட செம்மறியாடுகள் வரத்தே அதிகம் காணப்பட்டது. பக்ரீத் பண்டிகையை ஒட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை ரூ.1 கோடியை தொடும். ஆனால் ஊரடங்கு காரணமாக நேற்று 4ல் ஒரு பங்கு கூட விற்பனை நடக்கவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். விற்பனை செய்யப்படாத ஆடுகள் வேன்களில் கயத்தாறு பகுதிக்கு திரும்ப கொண்டு செல்லப்பட்டன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்