சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், வீடியோ கால் மூலம் புகார்களை இன்று விசாரித்ததோடு உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்...

காவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 1-ம் தேதி மாற்றப்பட்டார்.


புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பின்போது அளித்த பேட்டியில், பொதுமக்கள் சந்திக்க வராத நிலையில் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்திருந்தார்.


வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் ஒரு மணி நேரம் வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் வாட்ஸ் அப் வீடியோ காலில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.


இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிவிப்பு: “சென்னை பெருநகரில் கரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் தங்கள் குறைகளைக் காவல் ஆணையரை நேரடியாகச் சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையரை 6369 100 100 என்ற கட் செவி (Whats App) எண்ணில் காணொலி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவித்திருந்தார்.


அதன்படி, இன்று (03.07.2020) வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மேற்கண்ட கட்செவி (WhatsApp) எண்ணில் காணொலி மூலம் புகார் அளிக்கும் புதிய திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.


காணொலி மூலம் மொத்தம் 34 நபர்கள் காவல் ஆணையரிடம் தங்களது குறைகளைத் தெரிவித்தனர். புகார்கள் பொதுவாக கொடுக்கல் வாங்கல், திருட்டு, நில அபகரிப்பு, ஆன்லைன் மோசடி, காசோலை மோசடி, இ-பாஸ், பொது ஊரடங்கு மற்றும் பொதுத் தொல்லைகள் சம்பந்தமாக இருந்தன.


மேற்படி புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார்”. இவ்வாறு காவல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.