கடன் கட்டு... இல்லனா இறந்துவிட்டதாக சர்டிபிகேட் கொடு...’ நிதி நிறுவன ஊழியர் நெருக்கடி

திருச்சியில், டிராக்டருக்கான கடன் தொகையைக் கட்ட முடியாவிட்டால், உனது இறப்புச் சான்றிதழையாவது கொடு அதை வைத்து கடனை முடித்து விடுகிறோம் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.


திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் அடுத்த குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்; திருமணம் ஆகாத முருகானந்தம் தாயுடன் வசித்து வருகிறார். திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் மூலம் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார்.


3 மாதங்களுக்கு ஒருமுறை 31,500 ரூபாய் அவர் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் டிராக்டர் வழங்கப்பட்டது. 3 தவணைகளாக 9 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலையின்றி வீட்டில் முடங்கினார் முருகானந்தம். அதேநேரம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், முருகானந்தம் வீட்டிற்கு சென்று தவணையை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்துள்ளனர்.


கொரோனா ஊரடங்கில் தவணை செலுத்தும்படி நெருக்கடி அளிக்கக் கூடாது என அரசின் உத்தரவை முருகானந்தம் எடுத்துக் காட்டியும் அவர்கள் விடவில்லை.


தினசரி காலையில் முருகானந்தம் வீட்டிற்கு அந்த ஊழியர்கள் சென்று விடுவார்கள் என்றும் அங்கேயே படுத்துக் கொள்வார்கள் என்றும் கூறுகிறார் முருகானந்தம். நெருக்கடி முற்றியதால், ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயாரை உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டார் முருகானந்தம். இதற்கிடையே, தவணை வசூலிக்கும் நபர் முருகானந்தத்திற்கு வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.


அதில், பணத்தைக் கட்டு இல்லை என்றால், நீ செத்து விட்டதாக சான்றிதழையாவது வாங்கிக் கொடு; அதை வைத்து லோனை முடித்து விடுகிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த முருகானந்தம், வாத்தலை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.


இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது, தாங்கள் டிராக்டர் லோனுக்கான தவணையை கேட்கவில்லை என்றும், அவர் வாங்கிய இன்னோவா காருக்கான தவணையைத்தான் கேட்டதாக கூறியுள்ளனர். மேலும், முருகானந்தம் போனை குடும்பத்தினர் எடுத்து இறந்துவிட்டதாக கூறியதாகவும், அதனால்தான் இறப்பு சான்றிதழ் கேட்டதாக விளக்கமளித்துள்ளனர்.


முருகனாந்தத்தின் புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில்தான் யார் கூறுவது உண்மை என தெரிய வரும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா