சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை காவலரின் உருவ படத்திற்கு காவல்துறையினர் மலர்த்தூவி மரியாதை!

கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை காவலரின் உருவ படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்த நாகராஜன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.


கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நாகராஜன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவராவார். இவர் வேப்பேரி காவல் நிலையத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தில் நாகராஜன் கொரோனா பரிசோதனை செய்தார்.


அப்போது பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்து நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கெனவே சென்னை காவல்துறையில் மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, பட்டினப்பாக்கம் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் மூன்றாவது காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் நாகராஜனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், வடக்கு, தெற்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நாகராஜனின் உருவ படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்